விளாத்திகுளம் அருகே பட்டா மாறுதலுக்கு 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சாலையம் தெருவைச் சேர்ந்த சங்கரலிங்கம் மகன் சிவலிங்கம்(50). இவர் பெயின்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு விளாத்திகுளம் சிதம்பர நகரில் 3.4 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பட்டா கேட்டு கடந்த 2-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார். அவர் தனது விண்ணப்பத்தை பரிசீலிக்க பிர்கா நில அளவையர் செல்வமாடசாமியை(41) அணுகினார். அவர் விண்ணப்பத்தை பரிசீலிக்க ரூ.4 ஆயிரம் கேட்டுள்ளார். அதுதொடர்பாக சிவலிங்கம் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து ரூ.3 ஆயிரத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனாலும், லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சிவலிங்கம், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. பீட்டர் பால்துரையிடம் தெரிவித்தார். அவரது அறிவுரைப்படி ரசாயன பவுடர் தூவிய பணத்தை, விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரம் கிராமத்தில் வைத்து சிவலிங்கம், நில அளவையர் செல்வமாடசாமியிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் சுதா, உதவி ஆய்வாளர் தளவாய் சண்முகம், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பாண்டி,சுந்தரவேல், கோமதிநாயகம் மற்றும் போலீஸார் சுற்றி வளைத்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி, தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர். ராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வமாடசாமி, விளாத்திகுளம் அருகே சுப்பிரமணியபுரத்தில் வீடு எடுத்து தங்கியிருந்து பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடதக்கது.