வேலூரில் குடிநீர் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டம்!
வேலூரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சிக்குட்பட்ட 35 வது வார்டு சைதாப்பேட்டை பிடிசி சாலை, சுருட்டுக்கார தெரு, விநாயகர் நகர் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆவேசமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து பொறுத்து பொறுத்து பார்த்த பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வந்ததால் கொதித்தெழுந்த பெண்கள் காலிக் குடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆற்காடு சாலை பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வேலூர் வடக்கு காவல் நிலைய காவல்ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அத்துடன் 35 வது வார்டு மாமன்ற உறுப்பினரிடம் பேசி குடிதண்ணீரை தங்கு தடையின்றி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் திடீர் பரபரப்பு நிலவியது குறிப்பிடத்தக்கது.