வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சனை: பொதுமக்கள் கடும் அவதி-திடீர் சாலல மறியல்!
குடியாத்தத்தில் குடிநீர் கேட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, உள்ளி ஊராட்சிக்குட்பட்ட பட்டுவாம்பட்டி, வேலாயுதம்பட்டி, ஞானமேடு மற்றும் மாதுப்பட்டி ஆகிய நான்கு கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு குடிநீர் இன்றி தவித்து அவதிக்குள்ளாகி பெரும் சிரமத்தை அனுபவித்து தத்தளித்து வருகின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினருக்கும், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் பல்வேறு புகார்கள் தந்த நிலையில் யாரும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட நான்கு கிராமங்களில் பொதுமக்கள், பெண்கள் திரளாக கலந்து கொண்டு குடிநீர் வேண்டுமென கோரி காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த குடியாத்தம் தாலுகா போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என உறுதியளித்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் பேசி குடிநீர் வழங்க வழிவகை மேற்கொள்ளப்படும் என வாக்குறுதி அளித்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் செய்து சாலை மறியலை கைவிட்டு, போக்குவரத்து நெரிசலை சீர் செய்தனர்.
இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது என்பது குறிப்பிடத்தக்கது. சீரான குடிநீர் வழங்கவும் தடையின்றி குடிநீர் வழங்கும் தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க மாவட்ட ஆட்சியர் துரிதமாக நடவடிக்கை எடுத்து குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று இச்செய்தி வாயிலாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.