மாவட்ட செய்திகள்
தஞ்சை கரந்தையில் ஆடிட்டர் ஒருவர் முன்விரோதம் காரணமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (45). ஆடிட்டர். இவர் தன் வீட்டுக்கு அருகில் பண்ணை ஒன்று வைத்துள்ளார். அதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் போன்றவற்றை வளர்த்து வருகிறார்.

இப்பகுதியில் உள்ள மாநகராட்சி குளியல் மற்றும் கழிவறை கட்டிடத்தை ஆடிட்டர் மகேஸ்வரன் சமீபத்தில்தான் ஏலத்திற்கு எடுத்துள்ளார். இந்த ஏலம் விவகாரத்தில் மகேஸ்வரனுக்கும் சிலருக்கும் முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு தனது பண்ணையில் மகேஸ்வரன் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த பண்ணைக்குள் புகுந்து மகேஸ்வரனை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடியது.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். உடன் இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் விரைந்து சென்று மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மகேஸ்வரன் மனைவி நிஷா கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் சேர்வைக்காரன் தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் இட்லி கார்த்திக் என்கிற கார்த்திக் (35), கரந்தை ஆனந்தம் நகர் பாண்டி என்பவரின் மகன் அர்ஜூன் என்கிற அரவிந்த்(26) , கரந்தை செல்லியம்மன் கோவில் தெரு பாலு என்பவரின் மகன் குமரேசன் (29), பாபு என்பவரின் மகன் மணிகண்டன் (29) ஆகிய நால்வரும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் தஞ்சை மேற்கு போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொலை நடந்த சில மணிநேரத்திலேயே சம்பவத்தில் தொடர்புடையவர்களை போலீசார் மடக்கிப்பிடித்தற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
