BREAKING NEWS

60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர்

மரத்தின் கிளைகளை வெட்டுவதற்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று 60 ஆண்டுகால பழமையான மரத்தை அடியோடு வெட்டி விற்பனை செய்த திமுக ஒன்றிய செயலாளர், ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளர் என்பதால் அடக்கி வாசிக்கும் அதிகாரிகள் :-

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நலத்துக்குடி கிராமத்தில் பெருமாள் கோயில் தெரு மற்றும் செல்லியம்மன் கோயில் அருகே அறுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த இரண்டு பெரிய தூங்குமூஞ்சி மரங்கள் இருந்தன. இந்த மரங்களின் கிளைகள் அடிக்கடி மின்சார கம்பிகளில் பட்டு மின்சாரம் தடைபடுவதாக கூறி மயிலாடுதுறை கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் முருகமணி என்பவர் மரத்தின் கிளைகளைக் கழிக்க வேண்டும் என்று (வெட்டி அப்புறப்படுத்த வேண்டும்) மயிலாடுதுறை கோட்டாட்சியரிடம் மனு அளித்திருந்தார். இது குறித்து வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆபத்தாக உள்ள கிளைகளை மட்டும் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என்று கோட்டாட்சியர் அனுமதி வழங்கினார். கிளைகளை மட்டும் வெட்டி அப்புறப்படுத்துகிறேன் என்று கூறிவிட்டு பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரத்தை ஒரே நாளில் வெட்டி அடியோடு அபேஸ் செய்தார் திமுக ஒன்றிய செயலாளர் முருகுமணி. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அந்த இடத்தை ஆய்வு செய்த வட்டாட்சியர் வெட்டப்பட்ட மரத்தை அங்கிருந்து டிராக்டர்களில் ஏற்றி செல்ல முயன்ற போது அதை தடுத்து நிறுத்திவிட்டார். ஆளுங்கட்சி ஒன்றிய செயலாளர் என்பதால் என்ன நடவடிக்கை எடுப்பது என்பது தெரியாமல் அதிகாரிகள் திகைத்து வரும் நிலையில்,மரத்தை வெட்டியதற்காக அபராதம் மட்டும் விதிக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணிந்து நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES
TAGS