சினிமா
மலையாள இயக்குநர் படத்தில் ஆர்.ஜே பாலாஜி.

ஆர்.ஜே பாலாஜியும் ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்து த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்கள்.
இந்தியில் வெற்றி பெற்ற ‘பதாய் ஹோ’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் ஆர்.ஜே பாலாஜி. ஆயுஷ்மன் குரானா, நீனா குப்தா, கஜராஜ் ராவ் உட்பட பலர் நடித்து இந்தியில் சூப்பர் ஹிட்டான படம் இது. இதை ‘வீட்ல விசேஷங்க’ என்ற பெயரில் ஆர்.ஜே பாலாஜி இயக்கி, நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப்படத்தின் பணிகள் நடைபெற்று வரும் நிலையில். புதிய படம் ஒன்றில் அவர் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்தப் படத்தை, மலையாள இயக்குநர் ஜியன் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். இவர், மலையாளத்தில், பிருத்விராஜ், இந்திரஜித், அனன்யா நடித்த ’தியான்’ என்ற படத்தை இயக்கியவர். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். டார்க் த்ரில்லர் காமெடியாக இந்தப்படம் உருவாக இருக்கிறது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. வரும் 23 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை.
