65 ஆண்டுகளாக இயங்கி வரும் நூலகம், பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாயம்..
சங்ககிரியை அடுத்த குள்ளம்பட்டி பகுதியில் 65 ஆண்டுகளாக இயங்கி வரும் நூலகம், பராமரிப்பின்றி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, நூலகத்தை சீரமைத்துத் தர வேண்டும் என வாசிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு நாட்டின் கல்வி அறிவை மேம்படுத்துவது எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு அதை பரவலாக்குவதும் அவசியமானது. அப்படிப்பட்ட கல்வியறிவை பரவலாக்க பள்ளிக்கூடங்களோடு, பொது நூலகங்களும் அவசியமானவை. இதனை உணர்ந்த அரசு, மாணவச் செல்வங்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களின் கல்வியறிவை மேம்படுத்தவும், போட்டித்தேர்வுகளை எழுதுபவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும் விதமாகவும், தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறை சார்பில் மாவட்ட தலைநகரங்கள் முதல் கிராமப்புறங்கள் வரை நூலகங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த அரசிராமணி குள்ளம்பட்டி பகுதியில், கடந்த 1959ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பொதுநூலகத்துறை சார்பில் கிளை நூலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்த கட்டிடம் திறக்கப்பட்டு தற்போது 65 ஆண்டுகள் முடிகிறது. ஆனால், இதுவரை இந்த நூலகத்தில் பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாததால், அந்த நூலகம் இடிந்து விழுந்தது.
மழைக்காலங்களில் கட்டிடத்திற்குள் நீர் கசிவதால், புத்தகங்கள் மழைநீரில் நனைந்து வீணாகிறது. வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அரசு, நூலகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என அங்கு வரும் வாசிப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், அந்த நூலகம் அருகில் உள்ள பனைவெல்ல கூட்டுறவு சங்க கட்டிடத்தில் தற்காலிகமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. ஆனால், இந்த கட்டிடமும் எந்த நேரத்திலும் மேற்கூரை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இந்த கட்டிடங்கள் ஆங்காங்கே தொங்கியவாரும், கம்பிகள் நீட்டியவாரும் கட்டிடத்தை சுற்றிலும் முட்புதார்களாகவும் இருக்கிறது. இங்கு சுமார் 5000-க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தினமும், 100-க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து படித்து செல்கின்றனர். இந்த நூலகத்தில் கவிதை, கட்டுரை, சிறுகதைகள், மருத்துவம், வரலாறு, இலக்கியம், நாவல்கள், தலைவர்களின் வரலாறு, வாழ்க்கையில் சிகரம் தொட்ட சாதனையாளர்களின் வரலாறு, ஆன்மீகம், சமையல் குறிப்புகள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன.
மேலும், வார, மாத இதழ்கள் என அனைத்தும் இங்கு இருக்கிறது.
இங்கு வந்து படிக்கும் மாணவர்களிடம் கேட்டபோது, இங்கு நூலகம் இருப்பது எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற அச்சத்திலேயே வந்து செல்வதாக தெரிவித்தனர். மேலும், தற்போதைய அரசு பல்வேறு பகுதிகளில் நூலகம் அமைக்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், இந்த பகுதியில் இடிந்து கிடக்கும் நூலகத்தை சீரமைத்து தரக்கோரி பலமுறை பல அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிக்கிறது. எனவே, இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இந்த நூலகத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.