75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சையில் காங்கிரஸ் கட்சியினர் நடை பயணம்

தஞ்சாவூர், ஆக.9-
நாட்டின் 75 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் சுதந்திர தின நடை பயணம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இன்று அந்தந்த மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் சுதந்திர தின நடை பயணம் மேற்கொண்டனர்.
தஞ்சையில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் துணைத் தலைவர் வக்கீல் அன்பரசன் முன்னிலையில் மாநகராட்சி அலுவலகம் முன்பு ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர். அங்கிருந்து கையில் தேசிய கொடியை ஏந்தியவாறு ஊர்வலமாக புறப்பட்டனர். தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம், சூரக்கோட்டை, மேல உளூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களின் வழியாக சுமார் 24 கி.மீ. தூரம் நடை பயணம் செய்து ஒரத்தநாட்டை அடைந்தனர். அங்கு தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
