மாவட்ட செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் 3 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற 300 காளைகள் – 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தமிழர்களின் வீர விளையாட்டான எருதுவிடும் விழா கிராமங்கள் தோறும் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டி கிராமத்தில் மாபெரும் எருதுவிடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கிட்டம்பட்டி ஊர் தலைவர்கள் திம்மராயன், கோவிந்தன்,மாதன், குள்ளன், ஆகியோர் தலைமையில் வகித்தனர். கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை ஆந்திர மாநிலம் குப்பம் சித்தூர் மற்றும் தமிழகத்தில் வேலூர் வாணியம்பாடி திருப்பத்தூர் ஆலங்காயம் கிருஷ்ணகிரி தர்மபுரி திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து 300 காளைகள் இந்த எருது விடும் விழாவில் பங்கேற்றது.
125 மீட்டர் தூரத்திற்கு சாலையின் நடுவே தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு அதன் நடுவே வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு கலைகளாக ஓட விடப்பட்டது. சீறிப்பாய்ந்து குறைந்த விநாடியில் இலக்கை எட்டும் காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு காளைகளும் இரண்டு சுற்றுகள் ஓட விடப்பட்டது. மூன்று மாநிலங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் பரிசாக மூன்று லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று பரிசுகள் பெற்ற காளைகள் இந்த எருதுவிடும் விழாவில் பங்கேற்று ஓடியது.
வாடிவாசலில் இருந்து இலக்கை நோக்கி ஓடும் காளையை தடுப்பு அரண்களை நடுவே இருந்து ஏராளமான இளைஞர்கள் வீர விளையாட்டை விளையாடினர் இந்த எருது விடும் விழாவை காண கர்நாடகா ஆந்திரா மற்றும் கிருஷ்ணகிரி வேலூர் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் ஆகியோர் கண்டு மகிழ்ந்தனர். திரும்பும் திசையெல்லாம் பொதுமக்களின் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. கிருஷ்ணகிரி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் வட்டாட்சியர் சரவணன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலர்கள் எருதுவிடும் விழாவில் விதிமுறைகள் குறித்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விழாவில் பங்கேற்று முதல் இடத்தைப் பிடித்த காளைக்கு 3 லட்சமும் இரண்டாவது பரிசு 2.5 லட்சமும் மூன்றாவது பரிசு 2 லட்சமும் அடுத்தடுத்து 50 காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.