மாவட்ட செய்திகள்
லாரியின் அடியில் சிக்கிய கார்… பறிபோன உயிர்கள்.
கரூரில் இருந்து இன்று அதிகாலை காரில் 5 பேர் சீர்காழி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், அயன்பேரையூர் என்ற பகுதியில் கார் சென்று கொண்டிருந்தது.
திடீரென பின்னால் வந்த லாரி, கார் மீது மோதியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரி மீது பயங்கரமாக மோதியது. இதனால் லாரியின் அடியில் கார் சிக்கிக் கொண்டது. இதில் காரில் இருந்த சிறுமி, இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த காரில் பயணம் செய்த 6 வயது சிறுவன் லேசான காயத்துடன் உயிர் தப்பினான்.
தகவலறிந்த மங்களமேடு போலீசார், தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யார் அவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.