BREAKING NEWS

மாவட்ட செய்திகள்

அம்பத்தூரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 10 லட்சம் வரை பணத்தை இழந்ததால் துப்பாக்கியால் தாடையின் கீழ்ப்பகுதியில் சுட்டு காவலர் தற்கொலை.

ஆவடி பூம்பொழில் நகரில் வசித்து வந்தவர் சரவணகுமார்/30.இவர் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் ஆயுதப்படை காவலர். இவரது மனைவி சுவேதா/26. இவர்களுக்கு திருமணமாகி 9 மாதமாகிறது. சரவணகுமாரின் சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆகும். சரவணகுமார் செயின்ட் தாமஸ் மலையில் உள்ள ஆயுதப்படையில் இருந்து சமீபத்தில் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தில் உள்ள ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கிடையில் சரவணகுமார் அம்பத்தூர் அடுத்த கள்ளிகுப்பத்தில் உள்ள தொலை தொடர்புத்துறை குடியிருப்பில் உள்ள மத்திய அரசு பாதுகாப்பு தனிப்பிரிவில் பாதுகாப்பு காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று மதியம் சரவணகுமார் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். அப்போது அவர் வயிற்றுப்போக்கு இருப்பதாக கூறி அங்குள்ள கழிவறைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர் வெகு நேரமாகியும் பணிக்கு வரவில்லை. இதனையடுத்து மாற்றுப் பணிக்கு வந்த காவலர் விஜய் அவரை தேடி கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது கழிவறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து அவர் பலமுறை தட்டியும் சரவணகுமார் திறந்து வெளியே வரவில்லை. இதனையடுத்து காவலர் விஜய் உயர் அதிகாரியான தீனதயாளனுக்கு தகவல் கூறியுள்ளார்.

அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கழிவறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது அங்கு சரவணகுமார் தாடையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தீனதயாளன் ஆவடி மாநகர காவல் ஆணையரகத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் மகேஷ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஆயுதப்படை காவலர் சரவணகுமாருக்கு ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு இருந்து உள்ளது. இந்த விளையாட்டில் அவருக்கு 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சரவணகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்தது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )