திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை அர்ச்சகர்கள் சட்டையை பிடித்து தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கூட்டம் அதிகரித்து காணப்படுவதால் நூறு ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பக்தர்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தேசம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பக்தர்களின் கூட்டத்தை பயன்படுத்தி கோவில் அர்ச்சகர்கள் பக்தர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு முறைகேடான வரிசைகளில் தரிசனத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.
அவ்வாறாக பக்தர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மூத்த குடிமக்கள் செல்லக்கூடிய வரிசையில் பக்தர்களை அர்ச்சகர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இது தொடர்பாக காவலர்களுக்கும் அர்ச்சர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறின் போது அர்ச்சகர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் சூழ்ந்து கொண்டு காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அர்ச்சகர் ஒருவர் பணியில் இருந்த காவலரை சட்டையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டுள்ளார். இந்த தகராறினை அங்கு இருந்த பக்தர்கள் தங்களுடைய மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். மேலும் தகராறின்போது அர்ச்சகர் ஒருவர் காவலரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் நாள்தோறும் பக்தர்களிடம் அச்சர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு இது போன்ற எல்லை மீறிய செயல்களால் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பக்தர்களிடம் உள்ளே அழைத்துச் செல்வதாக கூறி பணத்தினை பெற்றுக்கொண்டு உள்ளே அழைத்துச் செல்லாமல் ஏமாற்றியதாக பக்தர் ஒருவர் அர்ச்சகரிடம் சண்டையிட்டு கொடுத்த பணத்தினை திரும்ப பெறுகிறார்.
இந்த காட்சியினை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவேற்றியுள்ளார். புகழ்பெற்ற கோவிலில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது பக்தர்களிடம் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கோவிலில் பாதுகாப்பு பணியில் நின்ற காவலரை அர்ச்சகர் தாக்கிய சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.