தலைப்பு செய்திகள்
உக்ரைனில் படித்துவரும் பழனியை சேர்ந்த மாணவர் ஒருவர் பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்பியுள்ளதால் பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் நாட்டில் ஏராளமான இந்திய மாணவர்கள் தங்கிப் படித்து வருகின்றனர். இந்நிலையில் போர் தொடுக்க வாய்ப்புள்ளதாக அறிந்த உடனே இந்திய மாணவர்களை நாடு திரும்புமாறு இந்திய அரசு அறிவுறுத்தியது.
இருப்பினும் பல மாணவர்கள் நாடு திரும்பாமல் உக்ரைனிலேயே தங்கினர்.இந்நிலையில் கடந்த 3 நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவதால் இந்திய மாணவர்கள் அனைவரும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருபவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த ஜோதியானந்தன்-சரஸ்வதி தம்பதியரின் மகன் கோகுல் என்பவர் உக்ரைன் நாட்டிலிருந்து நேற்று (பிப். 25)சொந்த ஊர் திரும்பியுள்ளார். இதனால் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கும் சூழல் உள்ளது. எனவே உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் உடனடியாக நாடு திரும்பவேண்டும் என இந்திய அரசாங்கம் அறிவித்த அன்றே விமானத்தில் முன்பதிவு செய்து ஊர் திரும்ப முடிவு எடுத்தேன். அதன்படி கடந்த புதன்கிழமை இரவு விமானம் மூலமாகப் புறப்பட்டு வியாழக்கிழமை சென்னை வந்து வெள்ளிக் கிழமை பழனி வந்தடைந்தேன்” எனத் தெரிவித்தார்.