தலைப்பு செய்திகள்
உடுமலை வனப்பகுதியில் தண்ணீர் உணவு தேடி இடம்பெயரும் வனவிலங்குகள்.
வாகன ஓட்டிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை.
உடுமலை அமராவதி வனச்சரகத்தில் கடுமையான கோடை நிலவி வருவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட உடுமலை அமராவதி கொழுமம் வனச்சரக த்திற்கு உட்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதி களில் யானை கரடி புலி சிறுத்தை காட்டுமாடு உடும்பு மான்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
ஆண்டுதோறும் கோடை காலங்களில் வனப்பகுதியில் உள்ள நீர் ஓடைகள் அருவிகள் சிற்றோடைகள் குட்டைகள் ஆகிய நீராதாரங்கள் வரண்டு விடும்.
கோடை வெயில் காரணமாக மரங்கள் செடி கொடிகள் காய்ந்து விடும்.
அப்போது வன விலங்குகள் உணவுகளையும் தண்ணீரையும்தேடி ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயர்வது துவங்கும்.
இந்த நிலையில் கடந்த மூன்று வாரமாக வனப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருவதால் வனத்துறையினர் வனவிலங்குகளின் தாகம் தணிப்பதற்காக ஆங்காங்கே கட்டி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரை நிரப்பி வருகின்றனர்.
இருப்பினும் யானை போன்ற பெரிய விலங்குகள் தாகத்தைத் தணிப்பதற்காக உடுமலை மூணாறு சாலையில் ஏழுமலையான் கோவில் பிரிவு காமனூத்துபள்ளம் ஆகிய பகுதிகளில் சாலையை கடந்து அமராவதி அணையை நோக்கி படையெடுத்து வருகின்றன.
எனவே உடுமலையில் இருந்து கேரள மாநிலம் மூணாறு நோக்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன கனரக வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் சாலையில் மெதுவாக செல்லும் படி வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் காட்டு தீ பரவும் அபாயம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டிகள் சாலையின் ஓரத்தில் சமையல் செய்யக்கூடாது பீடி சிகரெட் பிடித்து விட்டு அணைக்காமல் வனப்பகுதியில் வீசிவிட்டு செல்லக் கூடாது.
வன விலங்குகளைக் கண்டால் அதனை எரிச்சலூட்டும் வகையில் துன்புறுத்தி அருகில் சென்று செல்பி எடுக்கும் முயற்சி மேற்கொள்ள கூடாது என வனத்துறை அதிகாரிகள் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.