BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை நகராட்சிக்கு கடந்த 19 ம் தேதி நடந்த தேர்தலில் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட சுந்தரலிங்கம் உள்பட 15 அதிமுக கவுன்சிலர்கள், மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ள மறைமுக தேர்தலை தள்ளிவைக்க கூடாது என மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், தங்களை ஆளுங்கட்சியினர் மிரட்டுவதாக புகார் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்படும் எனவும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், தேர்தலை தள்ளிவைக்கும் திட்டமில்லை எனவும் விளக்கமளித்தார். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கண்காணிப்பு கேமராவில் ஆடியோ பதிவாகாது என்பதால், வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என கோரினார்.

தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், நகராட்சியில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரை கடத்தியதாக மனுதாரருக்கு எதிராக புகார் உள்ளதாகவும், அது குறித்து வழக்கு பதிந்துள்ளதாகவும், எந்த கைது நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.வாதங்களை கேட்ட நீதிபதிகள், தேர்தல் தள்ளிவைக்கப்படலாம் என மனுதாரர்கள் அச்சம் கொள்ள எந்த காரணமும் இல்லை, திட்டமிட்டபடி தேர்தல் நடத்தலாம் எனவும், நகர்புற உள்ளாட்சி தேர்தலின் போது, நீதிமன்ற உத்தரவுப்படியும், தேர்தல் ஆணைய அறிவிப்பின் படியும் கண்காணிப்பு கேமரா பதிவு செய்யப்பட்டதால், மறைமுக தேர்தலில் அதை மாற்ற வேண்டாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.அதேசமயம், மறைமுக தேர்தலை அமைதியாக நடத்த அறிவுறுத்திய நீதிபதிகள், ஏதேனும் சட்டவிரோத செயல்கள் நடந்தால் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையை அணுகலாம் எனவும் உத்தரவிட்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )