தலைப்பு செய்திகள்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து, நேற்று அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திமுகவை விட காவல் துறையினரை அதிகமாக தாக்கிப் பேசினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, “தேர்தலில் முறைகேடு செய்து திமுக வெற்றி பெற்றது. தொண்டர்கள் எழுச்சியுடன் வந்தது கோவை மாவட்ட மக்களை காப்பாற்றுகிற ஒரே கட்சி அதிமுக என்பதை நிருபித்துள்ளது. திமுக ஆட்சியில் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவது வழக்கம். ஸ்டாலின் ஆட்சியில் 12 வழக்குகள் உடைய கள்ள ஓட்டு போட வந்த ரவுடியை ஜெயக்குமார் பிடித்துக் கொடுத்தார். போலீஸ் செய்யாத வேலையை ஜெயக்குமார் செய்தார். ஜெயக்குமாரை முடக்கும் எண்ணத்தில் கைது செயப்பட்டுள்ளார்.
கோவையில் ஏராளமான அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இது வெட்ககேடாக விஷயம். பணம், பரிசு, கொலுசு என போலீசை வைத்து வீசி எறிந்தார்கள். ஆனால் வழக்கு மட்டும் அதிமுகவினர் மீது போடப்படுகிறது. அதிமுகவினருக்கு பிராடு பண்ணத் தெரியாது. மெசினை மாற்ற தெரியாது. நியாயப்படி தேர்தல் நடந்திருந்தால் கோவை மாநகராட்சியில் 85 இடங்களில் அதிமுக வென்றிருக்கும். அதை மாற்றியுள்ளார்கள். தேர்தல் நாளான்று கொரோனா நோயாளிகள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்ட நேரத்தில் எவ்வளவு ஓட்டு போடப்பட்டது. முழுமையாக விஞ்ஞான முறையில் அதிமுக ஜெயிக்கும் இடங்களை சர்வே எடுத்து, அதிமுகவிற்கு விழுந்த ஓட்டை திமுகவிற்கும், திமுகவிற்கு விழுந்த ஓட்டை அதிமுகவிற்கும் மாற்றி எங்கள் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். இது அப்பட்டமான ஜனநாய படுகொலை.
இதனை மீறி வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர் மீது வழக்கு போட்டும், குடும்பத்தையினரையும் மிரட்டி வருகின்றனர். இதற்கு காவல் துறை வேறு வேலை பார்க்க போகலாம். பணியிடமாற்றம் செய்வதை தவிர திமுக வேறு என்ன செய்து விட முடியும்? அதிமுக ஆட்சியில் எப்படி இருந்தீர்கள்? திமுகவிற்கு அடிமையாக காவல் துறை இருப்பதற்கு வெட்கமாக இல்லையா? இதை நிறுத்திக் கொள்ளுங்கள். எவ்வளவு பொய் வழக்கு போட்டாலும் அஞ்ச மாட்டோம். இது செயற்கையான வெற்றி. பிராடு செய்து ஜனநாயகத்தை படுகுழிக்குள் தள்ளியுள்ளார்கள். இது நிரந்தரம் இல்லை. இந்த ஆட்சிக்கு முடிவு வரும். போலீஸ் அடிபணிந்து திமுகவினர் காலை கழுவுகிறார்கள். தயவு செய்து மானம் மரியாதை உடன் இருங்கள்.
திமுகவிற்கு ஓட்டு போட ஒரு காரணமும் இல்லை. 9 மாதத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள். எதுவும் செய்யாமல் எப்படி ஓட்டு போட்டார்கள்? தேர்தலுக்கு பிறகு மக்களிடம் சர்வே செய்த போது, அனைவரும் இரட்டை இலைக்கு ஓட்டு போட்டதாக சொல்கிறார்கள். எப்படி மாறியது?
ஜெயக்குமார் மீதான வழக்கை இரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும். இனியாவது கோவைக்கு திமுக ஏதாவது செய்ய வேண்டும். அத்தனை திட்டங்களும் நாங்கள் கொண்டு வந்தது தான். அதிகாரிகள், போலீஸ்காரர்கள், திமுக என மூவர் கூட்டணி போட்டு மக்களை தோற்கடித்து விட்டார்கள். ஜனநாயகத்தை தோற்கடித்துள்ளார்கள். திமுகவிற்கு கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஜல்ரா போடுகிறார்கள். இதற்கு முன்பு கம்யூனிஸ்ட்கள் இதுபோல இல்லை. அதிமுக தோற்கவில்லை. அதிகாரிகள், காவல் துறை, திமுகவினரின் முறைகேடுகளால் தோற்கடிக்கப்பட்டோம். இது நிரந்தரம் இல்லை. தொண்டனுக்கும், மக்களுக்கும் பிரச்சனை என்றால் நேரடியாக வருவோம். அதிமுகவினர் மீதான பொய் வழக்குகளை இரத்து செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட 8 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மீது பந்தயசாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்ட விரோதமாக கூடி கொரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை மீறி, நோய் தொற்றை பரப்பும் வகையில் செயல்பட்டதாக காவல் உதவி ஆய்வாளர் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், செல்வராஜ், கந்தசாமி, அமுல் கந்தசாமி ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.