தலைப்பு செய்திகள்
5ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம். பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3ஆவது வாரத்தில் தொடங்குகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 5ஆம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில், பெண்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது போன்ற தேர்தலின் போது திமுக அறிவித்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நகர்ப்புற பகுதிகளில் நிலுவையில் உள்ள பல்வேறு திட்டங்களை விரைந்து முடிப்பது போன்றவை குறித்தும், தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது. அந்த கூட்டத்தொடரில் 15 சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், அந்த மசோதாவை மீண்டும் நிறைவேற்றுவதற்காக சட்டமன்ற சிறப்புக் கூட்டம் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான சட்ட மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அன்றைய தினமே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட்டை தயார் செய்வதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. அதற்காக தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் அவற்றுக்கான சங்க பிரதிநிதிகளுடன் அரசு ஆலோசனை மேற்கொண்டது. அத்துடன், வேளாண்மை பட்ஜெட்டை தயாரிப்பதற்காகன பணிகளும் தீவிரமடைந்துள்ள நிலையில், சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதம் 3ஆவது வாரத்தில் தொடங்க கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும், வேளாண்மைத் துறை பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்யவுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக நடந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். இதனால், இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம் பெறுக்கூடும். குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு 1000ரூபாய் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.