தலைப்பு செய்திகள்
விஜயபாஸ்கரின் வியூகத்தால் அதிமுக வசமானது அன்னவாசல்.
பெரும் அமளிக்கிடையே அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சாதுரியத்தால் அன்னவாசல் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்றார் அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மா.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 8 இடங்களில் அதிமுக, 6 இடங்களில் திமுக கூட்டணி மற்றும் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இந்நிலையில், சுயேச்சையாக வெற்றி பெற்றவரும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்ததால் அதிமுகவின் பலம் 9 ஆக உயர்ந்து பெரும்பான்மை கிடைத்திருக்கிறது.
இந்நிலையில் மாவட்டத்தில் இருக்கும் எட்டு பேரூராட்சிகளில் 7 பேரூராட்சிகளை கைப்பற்றியிருக்கும் திமுக, அன்னவாசலையும் எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று கடும் பிரயத்தனம் செய்தது. ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சாதுரியத்தால் திமுகவை சமாளித்து, தங்கள் கட்சியை சேர்ந்த சாலை பொன்னம்மாவை பேரூராட்சி தலைவராக இன்று பதவியேற்க செய்திருக்கிறார்.
அன்னவாசல் பேரூராட்சியில் கடந்த மார்ச் 2-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற்றபோதே திமுக மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் கூடி பிரச்சினை செய்தனர். அவர்கள் அதிமுக கவுன்சிலர்கள் கடத்துவதற்காக வந்திருக்கிறார்கள் என்று அதிமுகவினரும் அன்றைய தினம் அங்கு அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் அதிமுக உறுப்பினர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கும்படியும், பேரூராட்சி தலைவர் தேர்தலை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்றும் அதிமுக தரப்பு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணித்து தலைவர் தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்று காலை 9.30 மணிக்கு தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் திமுகவினர் திரண்டு வந்து அதிமுகவினரை உள்ளே அனுமதிக்க மறுக்கலாம் அல்லது ரகளையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்த்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக உறுப்பினர்களை காலை 7 மணிக்கெல்லாம் தனது பாதுகாப்பிலேயே அழைத்துவந்து பேரூராட்சி வளாகத்தில் இறக்கிவிட்டார். அவர்கள் பேரூராட்சி அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கிருந்த ஊழியர்கள் ஒன்பது மணிக்கு மேல்தான் வரவேண்டும் என்று தடுத்தபோது அதிமுகவினர் தலையிட்டு அவர்களை உள்ளே செல்ல வழிவகை செய்தனர்.
அதிமுக உறுப்பினர்கள் உள்ளே சென்றுவிட்டனர் என்ற தகவல் தெரிந்ததும் மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுகவினர் பேரூராட்சி அலுவலகம் அருகே வந்து குவிந்துவிட்டனர். ஆனால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையில் அதிகமான அளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் திமுகவினரை உள்ளே அனுமதிக்கவில்லை. அதனால் போலீஸாரைக் கண்டித்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். இன்னொரு பக்கம் அதிமுகவினர் திரண்டு வந்து தங்கள் கட்சி பேரூராட்சி உறுப்பினர்களுக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர்.
இரு கட்சிகளைச் சேர்ந்தோரும் அராஜகத்தில் ஈடுபடுவதாக ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம்சாட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், பேரூராட்சி அலுவலக வாசலில் வைக்கப்பட்ட தடுப்புகளைக் கடந்து திமுகவினர் பேரூராட்சி அலுவலகத்துக்குள் செல்லவும் முயற்சித்தனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதற்கிடையே பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே பேரூராட்சி செயல் அலுவலர் திட்டமிட்டபடி தேர்தலை நடத்தினார். அதில் போட்டியின்றி அதிமுகவைச் சேர்ந்த சாலை பொன்னம்மா பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தகவல் வெளியில் கிடைத்ததும் திமுகவினர் கல் வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதில் காவலர்கள் உள்ளிட்ட பலரும் காயமடைந்தனர். இதனால் தடியடிக்கு உத்தரவிடப்பட்டது. போலீஸார் அதிக எண்ணிக்கையில் இருந்ததால் திமுகவினரை தடியடி நடத்தி விரட்டினர். இதில் ஏராளமான திமுகவினர் காயமடைந்துள்ளனர்.
இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து, அதற்கு தக்கவாறு திட்டமிட்டு, நீதிமன்றம் வரை சென்று, அன்னவாசல் பேரூராட்சியை அதிமுக கைப்பற்ற செய்திருக்கிறார் விஜயபாஸ்கர்.