BREAKING NEWS

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு

மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும்: நடிகர் சரத்குமார் பேச்சு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 17-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம், திருப்பூர் பாண்டியன் நகரில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் தலைமை வகித்து பேசியதாவது: திருப்பூரில் நூல் விலை நிரந்தரமாக இல்லை என்ற பிரச்சினை இருந்து வருகிறது. அடிக்கடி நூல் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது.

இதனால் தொழில்துறையினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னலாடை தொழிலும் பாதித்துள்ளது. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். 16 ஆண்டுகள் இந்த இயக்கத்தை நடத்தியிருக்கிறோம். சமத்துவம் இருந்தால் மட்டுமே இந்த நாடும் முன்னேறும், நாமும் முன்னேறுவோம் என்ற அடிப்படையில் தான் சமத்துவ மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது.

2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கஷ்டமோ, நஷ்டமோ சமத்துவ மக்கள் கட்சி தனியாக போட்டியிட வேண்டும். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் தீட்டுகிற திட்டங்கள் மற்றும் தீர்மானங்கள் குறித்து மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கில் அரசியலுக்கு நான் வரவில்லை.

வாக்களிக்க மக்கள் பணம் வாங்கக் கூடாது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் தானா என ஆராய்ந்து அமல்படுத்த வேண்டும். 1967 வரை நாடாளுமன்றத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தலும் ஒன்றாகத்தான் நடந்து வந்தது. இதன் பிறகு ஆட்சிகளை கலைக்கலாம் என்று எப்போது மத்திய அரசு முடிவு செய்ததோ, அன்றுமுதல் தேர்தல் மாறி மாறி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

CATEGORIES
TAGS