தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி அருகே விபத்துக்குள்ளாகி நின்று கொண்டிருந்த லாரி மீது ஈச்சர் வாகனம் மோதல் – 2 பேர் பலி – 2 பேர் காயம்.

நாகர்கோவில் வடசேரியை சேர்ந்தவர் பால்ராஜ். லாரி டிரைவரான இவர் இன்று நாகர்கோவிலில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து லாரியில் ரப்பர் லோடு ஏற்றிக்கொண்டு சென்னைக்கு கிளம்பியுள்ளார். அதே நிறுவனத்தினை சேர்ந்த மற்றொரு லாரியும் சென்னைக்கு கிளம்பியுள்ளது. அந்த லாரியை நாகர்கோவில் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் என்பவர் ஓட்டியுள்ளார். அவருடன் நாகர்கோவில் பூதப்பாண்டி தௌளத்தி பகுதியை சேர்ந்த லாரி கீளினிர் கென்னடியும் உடனிருந்துள்ளார்.

இரு லாரியும் அடுத்தடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் ராஜாபுதுக்குடி அருகே பால்ராஜ் ஒட்டி வந்த லாரி முன்னால் சென்ற சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி மீது மோதியுள்ளது. இதில் பால்ராஜ் ஓட்டிவந்த லாரிக்கு சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. பின்னால் வந்த டிரைவர் முருகன் மற்றும் கீளினர் கென்னடி ஆகியோர் தங்களது லாரியை ஓரமாக நிறுத்திவிட்டு விபத்துக்குள்ளான தங்களது நிறுவன லாரியை பார்த்துள்ளனர். அப்போது நாகர்கோவிலில் இருந்து மகாராஷ்டிரா மாநில நாசிக்கிற்கு பலாப்பழம் ஏற்றி சென்ற ஈச்சர் வாகனம் சாலையில் நின்று லாரியை பார்த்து கொண்டு இருந்த முருகன், கென்னடி மீது மோதியது மட்டுமின்றி, ஏற்கனவே விபத்தில் சிக்கி இருந்த லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளனது. இதில் சம்பவ இடத்தில் டிரைவர் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் கீளினர் கென்னடி, ஈச்சர் வாகனத்தில் வந்த நாக்பூரைச் சேர்ந்த ரோஷன், ரிஷிகேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் கயத்தார் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த 3 பேரையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கீளினர் கென்னடி உயிரிழந்தார்.
மற்ற 2 பேருக்கு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
