BREAKING NEWS

கஞ்சா போதையில் 3 வாலிபர்கள் பிரைட் ரைஸ் கடையில் பணம் கேட்டு கத்தியால் வெட்ட முயன்றனர்.

அரக்கோணம் அருகே கஞ்சா போதையில் 3 வாலிபர்கள் பிரைட் ரைஸ் கடையில் பணம் கேட்டு கத்தியால் வெட்ட முயன்றனர். கொள்ளையர்களின் கத்தி வீச்சுக்கு பயந்து கடை உரிமையாளரின் தாயார் வாழை மரத்தில் தங்க செயினை மாட்டிவிட்டு மரத்தின் கீழே உயிர் பயத்தில் பதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலம் பஜார் தெருவில் கம்பி கடை உரிமையாளரை கஞ்சா போதையில் சில இளைஞர்கள் மாமூல் கேட்டு கடை உரிமையாளரை மிரட்டினர். சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் தக்கோலம் போலீசில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடையின் உரிமையாளர் கஞ்சா போதை ஆசாமிகளுக்காக கடை திறக்க முடியவில்லை என்று சொல்லி தனது கடையின் ஷட்டரில் எழுதி வைத்துவிட்டு பூட்டி சென்றார்.

இந்நிலையில் தக்கோலம் அருகே உள்ள பரமேஸ்வர மங்கலத்தில் பிரைட் ரைஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு இரவு 9 மணியளவில் 3 பேர் கஞ்சா போதையில் உள்ளே புகுந்து பிரைட் ரைஸ் கேட்டுள்ளனர்.

கடை உரிமையாளர் வினோத்குமார் நேரமாகிவிட்டதால் பிரைட் ரைஸ் இல்லை என்று தெரிவித்துள்ளார். அப்போது திடீரென பிரைட் ரைஸ் கடையில் கோஸ் உள்ளிட்ட காய்கறி வெட்டுவதற்காக வைத்திருந்த பெரிய கத்தியை எடுத்து கண்மூடித்தனமாக வீசி உள்ளனர் .

இதில் பயந்து போய் கடையின் உரிமையாளர் வினோத்குமாரின் தாயார் மற்றும் கடை ஊழியர்கள் நான்கு பேர் என ஆளாளுக்கு கொள்ளையர்களிடமிருந்து தப்பி ஓடி உள்ளனர்.

குறிப்பாக உரிமையாளரின் தாய் கொள்ளையர்களுக்கு பயந்து அங்குள்ள வாழை மரத்தில் தனது இரண்டு சவரன் தங்கச் செயினை கழற்றி மாட்டிவிட்டு வாழை மரத்தின் கீழே இருட்டில் உயிர் பயத்துடன் உட்கார்ந்திருந்தார். கஞ்சா போதையில் இருந்த கொள்ளையர்கள் ரூ. 10 ஆயிரம் கேட்டு கடை உரிமையாளர் வினோத் குமாரை மிரட்டி உள்ளனர். அவர் பணம் இல்லை என்று சொன்னதும் கல்லாவை திறந்து 500 ரூபாய் எடுத்துக் கொண்டு டேபிள் மீது இருந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து 3 கொள்ளையர்களும் பைக்கில் தப்பி சென்றனர்.

தக்கோலம் போலீசாருக்கு இரவு 9.30 மணிக்கு தகவல் தெரிவித்த நிலையில் அதிகாலை 2 மணிக்கு சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து விசாரித்துள்ளனர்.

அதன்பிறகு சில ரகசிய தகவலின்பேரில் இலுப்பை தண்டலம் அருகில் கஞ்சா போதையில் இருந்த 10 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர் .

ஆனால் பிரைட் ரைஸ் கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பரமேஸ்வரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கவுதம், ரவிக்குமார், விக்னேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

அரக்கோணம், தக்கோலம், பரமேஸ்வரமங்கலம், இலுப்பை தண்டலம் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களில் கஞ்சா போதையில் இளைஞர்கள் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் போதைக்கு அடிமையாகி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது வாடிக்கையாக இருக்கிறது . போலீசார் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் . மேலும் கஞ்சா விற்பனை செய்பவர்களை குறிப்பாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். கண்துடைப்புக்காக கஞ்சா வைத்திருந்ததாக இளைஞர்களை கைது செய்து போலீசார் கணக்கு காட்டக்கூடாது என்று வணிகர்களும், கடை உரிமையாளர்களும், பொதுமக்களும் கோரிக்கை வைக்கின்றனர்.

CATEGORIES
TAGS