ஓமலூர் அருகே தேர்தலை புறக்கணித்து அடையாள அட்டைகளை வட்டாட்சியரிடம் ஒப்படைக்க வந்த கிராம மக்களால் பரபரப்பு
சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் கடந்த 50 ஆண்டுகளாக முறையான போக்குவரத்து வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த கோரிக்கைகளை அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் தொடர்ந்து புறக்கணிப்பத்தாக கூறி, கிராம மக்கள் நடப்பு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு செய்தனர்.
சக்கரைசெட்டிப்பட்டி ஊராட்சியில் உள்ள தொப்பளான்காட்டுவளவு, ஜல்லிக்காட்டுவளவு, மந்திவளவு, கோபிநாத புரம் ஆகிய பகுதிகளில் 15 ஆண்டுகளாக சாலை புதுப்பிக்கவில்லை, சரப்பங்கா நதியின் குறுக்கே அமைந்துள்ள ரயில்வே பாலத்தில் நான்கு வழிகள் உள்ளது. இந்த வழிகள் அனைத்தும் நீர்வழிப் பாதை என்பதால் அவ்வப்போது ரயில்வே நிர்வாகம் சார்பில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது.
தற்போது ரயில்வே பாலத்தினை ஒட்டி குறுகலான நிலையில் இரும்பு தண்டவாளங்கள் கொண்டு தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி பேருந்துகள், விவசாய பொருட்கள் கொண்டு செல்லவும், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட எந்த விதமான வாகனங்களும் சென்று வர முடியாத நிலை உள்ளது. இதில், கடைசி வழியில் பாதை அமைத்து கொடுப்பதாக அதிகாரிகள், மக்கள் பிரதநிதிகள் தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தும் நிறைவேற்றாமல் புறக்கணித்து வருகின்றனர்.
மேலும், சரபங்கா நதியில் ஏற்கனவே கட்டிய தடுப்பணை உடைந்து தடுப்பணை இருந்த சுவடே இல்லாத நிலையில் உள்ளது. தடுப்பணை கட்டாமல் அதிகாரிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். ஆனால், அவை 3 கோரிக்கைகளையும் செய்து கொடுக்க வலியுறுத்தி, 3 கிராம மக்கள் நடப்பு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக அறிவிப்பு செய்துள்ளனர். மேலும், கிராமம் முழுவதும் தேர்தல் புறக்கணிப்பு பேனர்கள் கட்டி வைத்துள்ளனர். வீடுகள், தெருக்களில் கருப்பு கொடி கட்டி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று கிராம மக்கள் ஒன்று கூடி ஓமலூர் தாலுக்கா அலுவலகத்திற்கு வந்தனர். அனைவரும் தேர்தலை புறக்கனிக்கும் விதமாக தங்களது வாக்காளர் அடையாள அட்டையை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முற்பட்டனர்.