கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம் காலை நேரத்தில் தீ விபத்து அதிகளவில் தொழிலாளர்கள் ஆலையில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். இவருக்கு சொந்தமான பத்ரகாளியம்மன் மேட்ச் ஒர்க்ஸ் என்கிற தீப்பெட்டி தொழிற்சாலை அப்பகுதியில் இயங்கி வருகிறது. இன்று காலையில் பணிகளை துவக்குவதற்காக ஆலையை திறந்தனர். பின்னர் மெஷின் யூனிட்டில் வழக்கமான பணியை சில தொழிலாளர்கள் மேற்கொண்டிருந்த போது அதிக மின்னழுத்தம் காரணமாக தீக்குச்சி தயாரிப்பு மிஷின் வெப்பமாகி அருகில் இருந்த மெழுகு பேரலில் நெருப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் மள மளவென மெஷினின் இதரப் பகுதிகளுக்கு தீ பரவியது. இந்த தீ விபத்தில் மெழுகு பேரல்கள், தீக்குச்சிகள், மற்றும் இயந்திரங்கள் முற்றிலும் தீயில் எரிந்து கருகி சேதம் அடைந்தன. இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக உருவானது. தகவல் அறிந்து கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான மீட்பு பணி வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கெமிக்கல் நுரை கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரமாக போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த தீபத்தில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதம் அடைந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.