தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்றிய டி. ஜெய்சங்கர் மீது உள்ளாட்சி துறை நிதி தணிக்கை சங்க நிறுவன தலைவர் வ. மாரிமுத்து சரமாரி புகார்!

தமிழ்நாடு உள்ளாட்சித் துறை நிதி தணிக்கை ஊழியர் சங்க நிறுவனத் தலைவர் வேலூர் வ. மாரிமுத்து விடுத்துள்ள பத்திரிக்கை செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் நிதி துறையின் கீழ் இயங்கும் 5 தணிக்கை துறைகளுக்கு தலைமை தணிக்கை இயக்குநராக இருந்த டி. ஜெய்சங்கர் ஒன்றிய அரசு பணிக்கே திருப்பி அனுப்பப்பட்டு இருக்கிறார்.
அவரை திருப்பி அனுப்பியதில் தமிழ்நாடு அரசுக்கும் சிஏஜி எனப்படும் இந்திய தலைமை தணிக்கை அலுவலகத்துக்கும் மோதல் என்கிற ரீதியில் சில ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன.
அது குறித்த உண்மை தகவல்களை தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கத்தின் நிறுவன தலைவர் என்ற முறையில் ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன். டி. ஜெய்சங்கர் ஒன்றிய அரசு பணியில் இருந்து டெப்டேஷன் முறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தணிக்கை துறையில் சில சீர்திருத்தங்களை மேற்பார்வையி டுவதற்காக மாநில அரசு பணிக்கு அழைக்கப்பட்டவர் ஆவார்.
இதற்கானஅரசாணையிலேயே அவர் எந்த நேரமும் அதாவது அந்த குறிப்பிட்ட பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே கூட ஒன்றிய அரசு பணிக்கு திருப்பி அனுப்பப்படலாம் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் அவரது பணியிடத்தில் மாநிலத்தின் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவரை நியமிக்கவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 2022ல் தலைமை தணிக்கை இயக்குநராக பணியாற்ற டி. ஜெய்சங்கர் ஆரம்பம் முதலில் தனது செயல்பாடுகளின் மூலம் தணிக்கை பணியாளர்களின் அதிருப்திக்கு ஆளானார். அவற்றை அவ்வப்போது தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு எமது தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கம் கொண்டு சென்றிருக்கிறது.
டி. ஜெய்சங்கரின் பணியாளர் விரோத நடவடிக்கைகள் மற்றும் விதிகளுக்கு முரணான உத்தரவுகளுக்கு எதிராக கூட்டுறவு தணிக்கை துறை அலுவலர் ஒன்றியம் கண்டன ஆர்ப்பாட்டத்தை கடந்த ஜூலை மாதமே நடத்தியதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். டி. ஜெய்சங்கரின் விதிகளுக்கு முரணான தணிக்கை நடைமுறைகள் மற்றும் தணிக்கை பணியாளர் விரோத நடவடிக்கைகளுக்கு சான்றாக
1) உள்ளாட்சி நிதி தணிக்கை சட்டம் 2014ன் கூறுகளை மீறி ஆணைகள் பிறப்பித்தது.
2) தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் மற்றும் விதிகள் 2023க்கு முரணான வாய்மொழி உத்தரவுகளை பிறப்பித்தது.
3) தணிக்கை நடைமுறைகளை மாற்றியும் தணிக்கையின் அளவை குறைத்தும் உத்தரவிட்டது இதனால் நிதி முறைகேடுகளை கண்டறிவதில் விடுதல்கள் ஏற்பட்டு தணிக்கையின் தரம் குறைந்து போனது.
4) தணிக்கை அறிக்கைகளை அங்கீகரித்தல் மற்றும் தணிக்கை தடை பக்திகளை தேர்வு செய்வதில் அதிகார பரவலாக்கத்திற்கு பதிலாக அதிகார குறிப்பு முறையை புகுத்தி அனைத்து தணிக்கை பணிகளின் முடக்கத்துக்கு காரணமாக இருந்தது.
5) நிதியாண்டின் இறுதி நாளில் மேற்கொள்ளப்படும் இருப்பு சரிபார்ப்பு நடைமுறையை நிறுத்தம் செய்து அதன் மூலம் ஏற்படும் இழப்பை கண்காணிக்க இயலாமல் செய்தது.
6) ஓய்வு பெற்ற ஒன்றிய அரசின் தணிக்கை அதிகாரிகளை கொண்டு பணியில் உள்ள தணிக்கை அதிகாரிகளின் அதிகாரத்தை பறித்தது.
7) உடன் நிகழ்த்த தணிக்கை நடைமுறையை செயல்படுத்த மறுத்தது.
8) இறந்து போன நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கியது. 9) தணிக்கை பணியாளர்களை விசாரணை இன்றி பணியிடை நீக்கம் செய்தது.
10) தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் பணிநேக்க காலத்தை சட்டத்திற்கு மாறாக நீட்டித்து அதன் மூலம் நிதித்துறை செயலாளரின் அதிகாரங்களை தானே எடுத்துக் கொண்டது.
11) பெண் தணிக்கை பணியாளர்களை 400 கி. மீட்டருக்கு அப்பால் உள்ள மாவட்டங்களுக்கு மாற்றுப் பணியில் அனுப்பியது.
12) மாற்றுத்திறனாளிகளை உள்ளூரில் பணிய அமர்த்தாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் செய்தது. 13) தவறு செய்த அதிகாரிகளை தப்பிக்க விட்டு அப்பாவிகளை பலிகடா ஆகியது.
14) தன்னுடைய அலுவலகத்துக்கு தனக்குத்தானே ‘தணிக்கை செயலகம்’ என்று பெயர் சூட்டிக் கொண்டது.
15) தணிக்கை பணியாளர்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் கூட்டம் நடத்தி குறைகளை கேட்க தலைமை செயலாளர் ஆணையிட்ட பிறகும் அதனை பொருட்படுத்தாமல் குறைகளை தீர்க்க மறுத்தது.
தணிக்கை தடை நீக்க நடைமுறைகளில் அதிகார குறிப்பு முறையை பின்பற்றி பல்வேறு புகார்களுக்கு இடம் அளித்ததோடு 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய உள்ளாட்சி நிறுவன அலுவலர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவதற்கு காரணமாக இருந்தது. உள்ளிட்டவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணாகவும் தணிக்கை பணியாளர் நலன்களுக்கு எதிராகவும் செயல்பட்ட டி. ஜெய்சங்கரை மாறுதல் செய்துவிட்டு இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஐஏஎஸ் ஒருவரை நியமிக்க கோரி எமது தமிழ்நாடு உள்ளாட்சி நிதி தணிக்கை ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் தேதி மற்றும் ஜனவரி 12ஆம் தேதிகளில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தேன். இந்த சூழ்நிலைகளை எல்லாம் பரிசீலித்த தமிழ்நாடு அரசு முடிவெடுத்து ஆக வேண்டிய நிலையில் அவரை ஒன்றிய அரசு பணிக்கு திருப்பி அனுப்பி இருக்கிறது.
இதில் எந்த ஒரு விதிமுறைகளும் தவறும் இல்லை என்பதால் தமிழ்நாடு அரசின் இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் தற்போது தலைமை தணிக்கை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரியின் வழிகாட்டுதலில் நிதி துறையின் கீழ் இயங்கும் ஐந்து தணிக்கை துறைகளும் சிறப்பாக செயல்படும் என்றும் திடமாக நம்புகிறேன் .
இவ்வாறு தமிழ்நாடு உள்ளாட்சி நிதித் தணிக்கை ஊழியர் சங்கத்தின் நிறுவன தலைவர் வ. மாரிமுத்து விடுத்துள்ள பத்திரிகை செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.