BREAKING NEWS

காட்பாடியில் மணல் மற்றும் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் சண்டை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது.

காட்பாடியில் மணல் மற்றும் கஞ்சா கடத்தல், விற்பனை மற்றும் சண்டை வழக்குகளில் தொடர்புடைய 6 பேர் கைது.

வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி யான பிரம்மபுரத்தில் உள்ள பாலாற்றில் திருட்டுத்தனமாக மணல் கடத்துவதாக அடிக்கடி வந்த புகார் மற்றும் ரகசிய தகவலின் அடிப்படையில், காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் பழனி தலைமையில் ,காவல் துறையினர் பிரம்மபுரம் பெருமாள் கோவில் தெருவில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தோஸ்த் என்ற கூண்டு வண்டியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அதில் திருட்டுத்தனமாக அரை யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து உடனே அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆற்காடு, தாழனூர் ,கத்தியவாடி ரோடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பாஸ்கரன்(24), ஆற்காடு, தாழனூர் ,சத்திரம் ரோடு தெருவைச் சேர்ந்த சபாபதி மகன் பெருமாள் ராஜா (32), ராணிப்பேட்டை, மலைமேடு பெல் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் ஏழுமலை (35 ) ஆகிய மூவரும் சேர்ந்து பாலத்தில் இருந்து ஆற்று மணல் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மூன்று பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.

காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில் காவலர்கள் காட்பாடி விஐடி பல்கலைக்கழகம் எதிரே உள்ள ஶ்ரீவைபவ் நகர் ஃபேஸ்-3 என்ற பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கையில் பையுடன் ஒருவர் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்தார். அவரை அழைத்து போலீஸார் விசாரணை செய்தனர்.

அவர் காட்பாடி தாராபடவேடு பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த விஜய ஆனந்த் மகன் சஞ்சய் (25 ) என்பதும்
அவர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதையும் ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவரை வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைத்தனர்.

காட்பாடி தாராபடவேடு பெருமாள் கோயில் தெருவில் தனது நண்பருடன் இரவு 9:30 மணி அளவில் வேலை செய்த பணத்தை வாங்கச் சென்றனர் இருவர். அதாவது கார்ணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த தனஞ்செழியன். பழைய காட்பாடி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு ஆகிய இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் தாங்கள் வேலை செய்ததற்கான பணத்தை வாங்குவதற்காக காட்பாடி, தாராபடவேடு பெருமாள் கோயில் அருகில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த தாராபடவேடு கோவிந்த முதலியார் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் மகன்கள் அஜித்குமார்( 25 ), அவருடைய தம்பி ஜீவா (24) ஆகிய இருவரும் நின்று கொண்டிருந்த தனஞ்செழியன் என்பவரிடம் வீண் தகராறு செய்து தாங்கள் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து அவரது தலையின் மீது ஓங்கி அடித்தனர்.

இதில் அவருக்கு பலத்த காயம் எற்ப்பட்டது. உடனே அவரை அவரது நண்பர் விஷ்ணு என்பவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். பின்னர் வந்து காட்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திக்கிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் அஜித் குமார், ஜீவா ஆகிய இரு போதை ஆசாமிகளையும் தேடிக் கண்டுபிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தார். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை வெகுவாக பாராட்டினார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன்.

CATEGORIES
TAGS