குலதெய்வக் கோயிலில் இருவீட்டார் முன்னிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருக்கோவிலூர் அருகே குலதெய்வக் கோயிலில் இருவீட்டார் முன்னிலையில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த பெரியக்கொள்ளியூர் கிராமத்தைச் சேர்ந்த செம்மலை மகன் நாராயணன்,பிறவியிலேயே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளியான இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார், இவர் தினசரி கூலி வேலை செய்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி
இவருக்குத் திருமணத்துக்காக பெண் கிடைக்காமல் பெற்றோரும்,உற்றாரும், ஊர் மக்களும் பல ஆண்டுகளாக பெண் தேடும் வேளையில் ஈடுபட்டு வந்தனர்,இந்த நிலையில்,மகாத்மா காந்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட சுயம்வரம் நிகழ்ச்சி மூலம், மகாலட்சுமியின் இவர்களின் குடும்பத்தினரின் அறிமுகம் கிடைத்தது.
அதேபோல் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தைச் சேர்ந்த கரடிபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிச்சைக்காரன் என்பவரின் மகள் மகாலட்சுமியும் பிறவியிலேயே வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி 8ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்,சுயவரம் நிகழ்ச்சியில் நாராயணனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமண பந்தம் உறுதி செய்யப்பட்டு,இதன் பின்னர் நிச்சயதார்த்தமும் நடந்தது.
இதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே மேலத்தாழனூரில் கிராமத்தில் அமைந்துள்ள இவர்களின் குலதெய்வமான பச்சையம்மன் கோயிலில்,இருவீட்டார் முன்னிலையில் இன்று நாராயணனுக்கும், மகாலட்சுமிக்கும் திருமணம் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதையடுத்து,திருமணம் முடிந்து மணமக்கள் கோயிலை சுற்றி மூன்று முறை வலம் வந்தபோது, வாய்பேச முடியாத நாராயணனும், மகாலட்சுமியும் சைகை மொழியில் அன்பாக பேசிக்கொண்டது,இரு வீட்டாரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.
மேலும், அங்கிருந்த குடும்ப உறுப்பினர்கள் மணமக்களை மனதார வாழ்த்தி அவர்களுடன் குழுவாக கோவிலில் அமர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ந்தனர்.
மேலும் மகாத்மா காந்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்ட செயலாளர் புண்ணியகோடி பேசுகையில் தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி புதுமண தம்பதிகளுக்கு அவர்கள் இல்லற வாழ்வில் செவிக்க பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் அவர்கள் வாழ்க்கை மேம்பட தகுந்த உதவியும் வழங்கி மாற்று திறனாளிகளின் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்றிட வழிவகை செய்திட வேண்டும் என்று கோரிக்கையும் வைத்துள்ளார்.