BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரைனில் போர்க்குற்றம்- சர்வதேச நீதிமன்ற விசாரணைகளுக்கு எல்லாம் வர முடியாது: ரஷ்யா திட்டவட்டம்.

உக்ரைன் மீதான யுத்தத்தைத் தொடர்ந்து போர்க்குற்றங்கள் தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்கப் போவதில்லை என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

உக்ரேன் மீது கடந்த 12 நாட்களாக யுத்தம் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த யுத்தத்தின் காரணமாக பல லட்சம் உக்ரேனிய மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். மேலும் உக்ரைனில் படித்து வந்த இந்தியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

உக்ரைன் மீதான இந்த யுத்தமானது சர்வதேச சட்டங்களை மீறிய செயல் என்றும் உக்ரைன் மக்கள் மீது ரஷ்யா போர்க்குற்றங்களை மேற்கொண்டு வருகிறது என்றும் அந்நாட்டு குற்றம்சாட்டி உள்ளது. ரஷ்யாவின் யுத்தத்தை தடுத்து நிறுத்த உக்ரைன் இடைவிடாத அழைப்பும் விடுத்துள்ளது.
இதனிடையே திஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் உக்ரைன், ரஷ்யா மீது புகார் தெரிவித்துள்ளது. அதில் உக்ரைன் கூறியுள்ளதாவது: உக்ரைன் மீதான யுத்தத்தை ரஷ்யா உடனே நிறுத்தி முடிவுக்கு கொண்டு வர சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

உக்ரைன் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டுள்ள தருணத்தில் நாங்கள் இந்த கட்டிடத்தில் நின்று கொண்டு அமைதிக்கு அழைப்பு விடுக்கிறோம். ரஷ்யாவின் இடைவிடாத குண்டுமழை, ஏவுகணை தாக்குதல்களை உக்ரைன் மக்கள் எதிர்கொண்டு நிற்கின்றனர். பல லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிருக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது.

இதுவரை ரஷ்யாவின் யுத்தத்துக்கு பிந்தைய காலத்தில் 15 லட்சம் பொதுமக்கள் நாட்டைவிட்டு வெளியேறி உள்ளனர். சொந்த நாட்டு குடிமக்களுக்கு எதுவிதமான அரசு சேவைகளை வழங்க முடியாத துயரத்தில் உள்ளது உக்ரைன். ரஷ்யாவின் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை முதல் முறையும் அல்ல. ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு படையெடுப்பு போக்கை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச சட்டங்களை மதிக்காத ரஷ்யா நாட்டால் பிரச்சனைகளுக்கு அமைதி முறைகளில் எப்படி தீர்வை காண முடியும்? இவ்வாறு உக்ரைன் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சர்வதேச நீதிமன்ற வழக்கறிஞர் தரப்பில் கூறுகையில், ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பு- போர்க்குற்றம் குறித்து விசாரணைகளை தொடங்க சர்வதேச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர்க்குற்றங்களை மேற்கொண்டு வருகிறது என்றனர். அதேநேரத்தில் திஹேக் நகரில் நடைபெறும் சர்வதேச நீதிமன்ற விசாரணைகளில் பங்கேற்க முடியாது என ரஷ்யா திட்டவட்டமாக கூறியுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )