வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் காவிரி கரையோர பகுதிகளில் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கியதுடன் வெள்ள பெருக்கு ஏற்பட்டால் பாதிக்கப்படும் பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தற்பொழுது கன மழை பெய்து வருவதால் கர்நாடக மாநிலத்தில் கிருஷ்ணராஜா சாகர் அணை மற்றும் கபிணி அணை ஆகியவை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனை அடுத்து, தற்பொழுது கர்நாடகா மாநிலத்திலிருந்து காவிரி ஆற்றில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேட்டூர் அணை முழு கொள்ளளவான 120 அடியில் தற்பொழுது சுமார் 115 அடியை எட்டியுள்ளது.
இதன் காரணமாக காவிரியில் எந்த நேரத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலையிலும், தற்பொழுது ஆடிப்பெருக்கை முன்னிட்டு பொதுமக்கள் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தமிழக அரசு 12 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் தற்பொழுது காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.