டாக்டர் அப்துல் கலாம் பெயரை பயண்படுத்தி நூதனமான முறையில் மோசடி-நடவடிக்கை எடுக்க கோரி மனு
கோவையில் மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பெயரை பயண்படுத்தி நூதனமான முறையில் மோசடியில் ஈடுபட்டு வருகின்ற, தனியார் அறக்கட்டளையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கபட்ட பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு
கோவை மாவட்டம் கீரனத்தம்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் கீரனத்தம் அடுத்த கொண்டையம் பாளையம் பகுதியில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பவுண்டேஷன் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனமானது பொதுமக்களுக்கு கடனுதவி, கல்வி உதவி, திருமண உதவி, மற்றும் இதர உதவிகளை தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தின் அறிவிப்பை நம்பி சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சேர்ந்தனர். அவர்களிடம் பொய்யான காரணங்களை கூறி, குறைந்தபட்சமாக ஒரு லட்சம் லோன் நாங்கள் வேண்டு்ம் என்றால், அதற்கு ஐந்தாயிரம் ரூபாய் முன் பணம் செலுத்த வேண்டும். அதிகபட்ச லோன் எவ்வளவு வேண்டுமானாலும் பெறலாம். ஆனால் லட்சத்திற்கு ஐந்தாயிரம் விதம் பணம் கட்டினால் 90 நாட்களில் கடன் பெற்றுக் கொள்ளலாம் என்றும். அதற்கு வட்டி எதுவும் இல்லை, மேலும் அரசின் மானியமாக 40 முதல் 50 சதவிகிதம் வரை கழித்துக் கொண்டு மீத தொகையை கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும் இந்த லோன் மூன்று மாதத்திற்குள் உங்களுக்கு வந்து விடும் என்று ஆசை வார்த்தைகளை கூறி பொதுமக்கள், ஏழை, எளிய மக்கள் என பலரிடமும், ஐந்தாயிரம் ரூபாயை நன்கொடை என்ற பெயரில் பெற்றனர். நூதனமாக, செயல்பட்ட நிறுவனம், ஏழை எளிய மக்கள் பணம் செலுத்தியதற்கான ரசீது தராமல், நன்கொடை என்ற பெயரில் ரசிதை வழங்கியுள்ளனர். இது குறித்து ஒரு சிலர் கேட்டதற்கு எங்கள் நிறுவனத்தில் இவ்வாறு தான் தருவோம் என்றும் கூறியுள்ளனர். இவர்களது பொய்யான பேச்சை நம்பி சுமார் 200-க்கும் மேற்பட்ட மக்கள், ஐந்தாயிரம், பத்தாயிரம் என செலுத்தி ஏமாந்தனர். தங்களுக்கு லோன் வரும் என்று எதிர் பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பணத்தை செலுத்தியவர்களுக்கு லோன் எதுவும் கிடைக்காமல் காலதாமதம் ஏற்பட்டு நிலையில், எங்களுக்கு லோன் எதுவும் வேண்டாம் கட்டிய பணத்தை திரும்ப தாருங்கள் என்று கேட்டால் மரியாதை இல்லாமல் தரக்குறைவாக பேசி அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க போகிறேன் என்று கூறினால் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள், எங்களது அறக்கட்டளைக்கு நீங்கள் நன்கொடை தான் வழங்கி இருக்கிறீர்கள் என்று நூதனமாக மோசடி செய்ததை கூறுகின்றனர் எனவும், எனவே மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும் என்று மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.