தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாயால் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்
தனியார் சிமெண்ட் நிறுவனத்துக்கு செல்லும் குடிநீர் குழாயால் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம்..!
சாலையில் பயணிக்கும் பயணிகளின் இருசக்கர வாகனங்கள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்குவதால் தினசரி விபத்து, உயிர் சேதம், பலத்த காயங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் அவதி
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியில் செயல்படும் தனியார் சிமெண்ட் நிறுவனத்திற்கு ஈரோட்டில் இருந்து சேலம் செல்லும் நெடுஞ்சாலை வழியாக ராட்சத குழாய் பதிக்கப்பட்டு அதன்மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், வெப்படை கடந்து சங்ககிரி வழியாக சேலம் வரை செல்லும் முக்கிய சாலையான இதில் தினசரி ஆயிரக்கணக்கான பேருந்துகள் மற்றும் அனைத்து வகையான வாகனங்களும் இந்த சாலையை கடந்து தான் செல்ல வேண்டும்
இந்நிலையில் பள்ளிபாளையம் முதல் ஒட்டமெத்தை வரை சாலையின் 20 இடங்களுக்கு மேல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் நிலைத்தடுமாறி கீழே விழுகின்றனர் மேலும் மழைக்காலங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சாலையில் இதுவரை பத்துக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தினால் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையை விரிவுபடுத்தும் பொழுது ராட்சச குழாய்களை சாலையின் ஓரமாக கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அப்படியே விட்டு விட்டதால் ராட்சச குழாயிலிருந்து கசியும் நீரினால் சாலையின் நடுவே அடிக்கடி பள்ளம் ஏற்படுகிறது. நெடுஞ்சாலை துறையினர் பள்ளத்தை பேட்ச் ஒர்க் மூலம் சீர் செய்தாலும் நீரின் கசிவால் மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது.
இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் புகார்கள் கொடுத்தும் எந்தப் பயன் இல்லை என்கின்றனர் அப்பகுதியை சேர்ந்தவர்கள்..