மாவட்ட செய்திகள்
கரணம் தப்பினால் மரணம்: பீதியில் குமரி வாகன ஓட்டிகள் கண்டுகொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?

கன்னியாகுமரி மாவட்டம், வடக்குத்தாமரைக்குளம் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையில் உடைந்து விழுந்த பாலத்தின் பக்கச்சுவர்கள் இன்னும் சீர் செய்யப்படவில்லை. இது வாகன ஓட்டிகளுக்கு மிகவும் ஆபத்தான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு பெருமழை பெய்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் தண்ணீருக்குள் மூழ்கியது. குடியிருப்புகள் ஓகி புயலுக்குப் பின் கடந்த பெருமழையில் தான் மீண்டும் மூழ்கியது. குமரி மாவட்டத்தில் அந்த பெருமழையினால் சேதமான சாலை, கால்வாய்ப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்துவருகிறது. அந்தவரிசையில் பல கால்வாய்களும், சாலைகளும் சீரமைக்கப்பட்டு வருகிறது. அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். ஆனால் கனமழையினால் எழுந்த பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட வடக்குத்தாமரைக்குளம் பாலம் மட்டும் சீர் செய்யப்படவில்லை.
கன்னியாகுமரி மாவட்டம், பறக்கை- வடக்குத்தாமரைக்குளம் சாலையின் பிரதான பாலம் இது. வடக்குத்தாமரைக்குளம் ஊராட்சிக்குட்பட்ட இந்த பாலத்தின் வழியே தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதேபோல் சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைபதிக்கு செல்வோரும் அதிகளவில் இந்தச் சாலையைப் பயன்படுத்துவது வழக்கம்.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் இருக்கும் பாலம் உடைந்துப் போய் காணப்படுகிறது. பெருமழைக்குப் பின்பு இது இன்னும் சீர் செய்யப்படவில்லை. அதேபோல் இந்த சாலையில் தெருவிளக்கு வசதியும் கிடையாது. இதனால் இரவுநேரங்களில் இந்த பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பெரிய விபத்துகள் ஏற்படும் முன்பு இந்த பாலத்தை விரைந்து சீர் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
