BSNL நெட்வொர்க்கை ஹேக் செய்த இளைஞர்!!
![BSNL நெட்வொர்க்கை ஹேக் செய்த இளைஞர்!! BSNL நெட்வொர்க்கை ஹேக் செய்த இளைஞர்!!](https://aramseithigal.com/wp-content/uploads/2022/06/WhatsApp-Image-2022-06-05-at-4.04.18-PM.jpeg)
கடந்த சில வாரங்களாக சென்னையில் பிஎஸ் என் எல் லேண்ட்லைன் இணைப்புகளில் சுமார் 10,000 முதல் 15,000 அழைப்புகள் ஹேக் செய்யப்பட்டன. இதனை அறிந்த பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் பகீர் தகவல்களும் தீடீர் திருப்பங்களும் வெளிச்சத்துக்கு வந்தன. அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் நைனார் குப்பம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை நடத்தினர்.காவல் துறை உதவியுடன் சோதனை செய்த போது, அந்த வீட்டில் ஏழு சிம் பெட்டிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் வைக்கபட்டிருந்தது.
ஒவ்வொரு பெட்டியும் 32 சிம் கார்டுகளை செயலாக்கும் திறன் கொண்டவை. இந்த வீட்டில் வசிக்கும் நபர் சட்டவிரோதமாக டவரில் இருந்து சிக்னல் ஹாக் செய்துள்ளார் எனக் கண்டறியப்பட்டது. அவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்ட போது அவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்பது அவருக்கு வயது 35வயது நாபல் என்பது அவருடைய பெயர் எனவும் தெளிவு படுத்தினார். அத்துடன் கானத்தூர் நைனார் குப்பம் பகுதியில் 7.500 ரூபாயில் வாடகை வீடு ஒன்று எடுத்து அதில் தங்கி மோசடியில் ஈடுபட்டார். பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ஜியோ போன்ற நிறுவனங்களை ஏமாற்றி அவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியுள்ளார்.
இதற்காக 224 வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக சிம் கார்டுகளை வாங்கியதையும் ஒப்புக் கொண்டுள்ளார். இந்த சிம் கார்டுகளை பிரத்யேக கருவிகளில் இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு நெட்வொர்க்கை உருவாக்கி அவர்களுக்கு ஒரு பிரத்யேக மொபைல் எண்ணை சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நெட்வொர்க்கில் பதிவு செய்து விநியோகம் செய்துள்ளார். அவர் பதிவு செய்த நம்பர்கள் அனைத்தும் போலி ஆதார் அட்டை மற்றும் போலி முகவரிச் சான்றிதழை பயன்படுத்தி வாங்கப்பட்டவை.
வெளி நாடுகளில் வசிப்பவர்கள் ஒரு பிரத்யேக கருவியை பயன்படுத்தி வாய்ஸ் ஓவர் இன்டர்நெட் புரோட்டோகால் அழைப்புகளைச் செய்கிறார்கள். இதன் மூலம் வீட்டிலேயே சிறிய அளவிலான டெலிபோன் எக்ஸ்சேஞ்சை உருவாக்கி அதன் மூலம் சர்வதேச அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றியதும் கண்டறியப் பட்டுள்ளது. இதற்காக ரௌட்டர் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் நெட்வெர்க்கை திருடியிருப்பதும் தெரியவந்துள்ளது.இந்த மோசடியில் சம்பந்தப்பட்டவர் குறித்த மற்ற தகவல்களை திரட்டி வருகின்றனர். இதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. அத்துடன் நாபல் மீது வழக்கு பதிவு செய்த கானத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.