அஜித்தை தொடர்ந்து விக்ரம் பட நடிகருடன் கைகோர்க்கும் எச்.வினோத்..

அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, ஏகே 61 என தொடர்ந்து 3 படங்களில் பணியாற்றிய எச்.வினோத் அடுத்ததாக விக்ரம் பட நடிகருடன் கூட்டணி அமைக்க உள்ளாராம்.
சதுரங்க வேட்டை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எச்.வினோத். சமூகத்தில் நடக்கும் நூதன திருட்டு சம்பவங்களை வெளிச்சம் போட்டு காட்டி இருந்த இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து கார்த்தி உடன் கூட்டணி அமைத்த எச்.வினோத், அவரை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கினார்.
அதிரடி, ஆக்ஷன் கதையம்சத்துடன் செம்ம மாஸாக எடுக்கப்பட்டிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதையடுத்து எச்.வினோத்துக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை. இது ரீமேக் படமாக இருந்தாலும், அதனை தமிழ் மக்களுக்கு பிடிக்கும் வண்ணம் எடுத்து வெற்றிவாகை சூடினார் எச்.வினோத்.
இதையடுத்து தனது அடுத்த படமான வலிமையை இயக்கும் வாய்ப்பை அளித்தார் அஜித். இப்படத்தை அஜித் ரசிகர்களுக்கு பிடித்தவாரு பக்கா ஆக்ஷன் படமாக உருவாக்கி இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ரிலீசான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மீண்டும் அஜித்துடன் இணைந்து ஏகே 61 படத்தில் பணியாற்றி வருகிறார் எச்.வினோத்.
இந்நிலையில், ஏகே 61 படத்துக்கு பின்னர் இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ள அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி உடன் அவர் கூட்டணி அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் செம்ம மாஸான கேரக்டரில் நடித்திருந்த விஜய் சேதுபதி, எச்.வினோத் படத்திலும் வித்தியாசமான ரோலில் நடிக்க உள்ளாராம்.