அரியலூர் அருகே பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற சித்தாங்காத்தவர் திருக்கோயில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆகிறது.
இந்நிலையில் சிதலமடைந்த கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கு ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி விழாவானது கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று, முக்கிய நிகழ்வான கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது.
முன்னதாக வேத மந்திரங்கள் முழங்க, தமிழ் தேவார திருமுறைகள் இசைக்கப்பட்டு, மேளதாளத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் கோவில் விமானத்தில் அமைந்துள்ள கலசத்திற்கு புனித நீரை சிவாச்சாரியார்கள் ஊற்றினர். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷங்களை எழுப்பினர்.
பின்னர் மகா தீபாரதனை நடைபெற்று, பக்தர்களுக்கு அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.