ஆடல் பாடலுடன் அமர்க்களம் – சிதம்பரத்தில் நடந்த சிவனடியார்கள் போராட்டம்.
ஆடல் பாடலுடன் அமர்க்களம் – சிதம்பரத்தில் நடந்த சிவனடியார்கள் போராட்டம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜரை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யூடூ புரூடஸ் என்ற யூ-ட்யூப் சேனலில் காணொலி ஒன்று பதிவிடப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. இதனால் அந்த பதிவு சம்பந்தப்பட்ட யூ-ட்யூப்பில் சேனலில் இருந்து நீக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நடராஜரை இழிவுபடுத்தி யூ-ட்யூப்பில் பதிவு செய்த மைனர் விஜயை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி சிதம்பரத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சிவனடியார்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் இசைக் கருவிகளையும், வாத்தியக் கருவிகளையும் இசைத்தபடி சிவ நடனம் ஆடினர்.
தொடர்ந்து, மைனர் விஜயை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், சிவனடியார் குரு தாமோதரன் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தையொட்டி, விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியன், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.