ஆடி அமாவாசையை முன்னிட்டு அணைப்பட்டி வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் அருகில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திரண்டு பொதுமக்களும் முன்னோர்களுக்கு திதி செலுத்தியும், தர்ப்பணம் செய்தும் வழிபாடு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் திரண்டதால் ஆங்காங்கே பலத்த போலீஸ் பாதுகாப்பும் நீண்ட வரிசையில் நின்று வீர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமி தரிசனம் பெற்றுச் சென்றனர். இவ்விழாவை முன்னிட்டு அணைப்பட்டி அருகே உள்ள மாலபட்டியில் பெருமாள் கோயில் இக்கோயிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு பெருமாள் கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதனைத் தொடர்ந்து சுவாமி ஊர்வலம் பிள்ளையார்நத்தம், பெருமாள் கோவில் பட்டி, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி , சொக்குபிள்ளைபட்டி, அணைப்பட்டி உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடுகளுக்கு சென்று சுவாமி அருள்பாலித்தார். அதனைத் தொடர்ந்து அணைப்பட்டியில் இருந்து கிளம்பி நேராக வைகை ஆற்றில் சுவாமி இறங்கினார். அப்போது அப்பகுதியில் ஏராளமான பக்தர்கள் சுவாமியின் தரிசனம் பெற்றனர்.
பக்தர்கள் பல்வேறு பூஜைகள் செய்து பல்வேறு மண்டகப்படிகளில் வைத்து அபிஷேகம் செய்தனர். இதன் பின்னர் அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோவில் முன்பு அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் அங்கிருந்து நேராக எஸ். மேட்டுப்பட்டி கிராமத்திற்குச் சென்று முக்கிய மண்டகப்படிகளை ஏற்று பின்னர் அணைப்பட்டி வந்தடைந்தார். இந்நிகழ்ச்சியைக் காண திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, கொடைரோடு, பள்ளபட்டி, விளாம்பட்டி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பினார்கள். அப்போது அப்பகுதியில் பக்தி பரவசம் காணப்பட்டது.
இவ்விழாவில் பொதுமக்களுக்கு தேவையான சுகாதார பணிகளை பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜா, மற்றும் ஊராட்சி செயலாளர் சின்னசாமி ஆகியயோர்கள் சுகாதார மற்றும் குடிநீர் பணிகளை செய்திருந்தனர். அதேபோன்று நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமாரன் தலைமையிலும் மற்றும் நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், விளாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா ஆகியோர்கள் முன்னிலையிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
