ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் பந்த். முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி.
ஆந்திர மாநிலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக முன்னால் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவை சி.ஐ.டி. போலீஸ்சார் கைது செய்தனர்.பின்னர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடுவை ஆஜர் படுத்தினர். கோர்ட்டில் இருதரப்பு வாதங்கள் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடுவை வரும் 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை ராஜ மகேந்திரபவரத்தில் உள்ள ஜெயிலில் நள்ளிரவு அடைத்தனர். ஜெயிலில் அவருக்கு 7691 கைதி எண் வழங்கப்பட்டது.ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவுக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும் வீட்டு உணவு வழங்கவும் நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது.இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு ஜெயிலில் அடைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டது.இந்த பந்திற்கு ஜனசேனா, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் லோக் சத்தா கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தெலுங்கு தேசம் கட்சி பந்த் அறிவிக்கப்பட்டதால் ஆந்திரா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆந்திராவில் பந்த் காரணமாக மாநிலத்தில் 50 சதவீதத்திற்கும் மேலான கடைகள் அடைக்கப்பட்டன. வாகனங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. ஆங்காங்கே மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வாகனங்களின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. வாகனங்களின் டிரைவர்கள் சிலர் காயம் அடைந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்தனர்.விஜயவாடா, கர்னூல், கடப்பா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆந்திராவில் பதட்டம் நிலைவியது.ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இருந்து வழக்கம் போல ஆந்திராவுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.ஆந்திர எல்லையில் இருந்து முக்கிய பஸ் நிறுத்தங்களில் அந்த மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.வேலூர் திருப்பதி இடையே இன்று வழக்கம் போல பஸ்கள் இயக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர்.
பந்த் காரணமாக ஆந்திராவுக்கு செல்லும் சரக்கு வாகனங்கள் தமிழக எல்லையில் உள்ள சோதனை சாவடிகள் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.பந்தால் பக்தர்கள் அவதி அடையக் கூடாது என்பதற்காக திருப்பதிக்கு மட்டும் பந்த் இல்லை என விலக்கு அளித்துள்ளனர். திருப்பதியில் கடைகள் ஓட்டல்கள் டீக்கடைகள் திறக்கப்பட்டு உள்ளது.பஸ்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. பக்தர்கள் சிரமம் இன்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.