ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் அரைநாள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் . பணிகள் பாதிப்பு
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் இன்று பிற்பகலில் அரைநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆண்டிபட்டி ஊரக வளர்ச்சித் துறை சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் மாவட்ட இணைச்செயலாளர் சக்திதிருமுருகன் கலந்து கொண்டு பேசினார்.
போராட்டத்தில் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் நிழற்குடை அமைத்ததில் அருகில் உள்ள குடிநீர் குழாய் உடைந்ததற்காக ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொறியாளரை தற்காலிக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும் அதை உடனடியாக ரத்து செய்ய கோரியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் திமுக ஒன்றிய குழு துணை தலைவர் ஊராட்சி ஒன்றிய மேலாளரை தரக்குறைவாக பேசியதை கண்டித்தும் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் போராட்டம் நடைபெற்றது. அரைநாள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 63 பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக ஈடுபட்டதால்
ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் பாதிக்கப்பட்டன.