ஏமாந்த ஏ.சி.எஸ். ஏமாற்றிய கட்சியினர்!
2000-ஆம் ஆண்டில் புதிய நீதிக் கட்சி தொடங்கியது முதல் பாஜக கூட்டணியில் பயணிப்பவர் ஏ.சி.சண்முகம். 2001-ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஆரணி எம்எல்ஏ தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2014, 2019, 2024-ஆம் ஆண்டுகளில் வேலூர் எம்.பி. தொகுதியில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டு மூன்று முறையும் தோல்வியை தழுவியுள்ளார்.
25 ஆண்டுகளாக, பாஜக கூட்டணியில் அணி மாறாமல் பயணிப்பவர் ஏ.சி.சண்முகம். எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தேர்தல் அணி மாற ஆனால் சண்முகமோ அணி மாறாமல், ஒரே பாதையில் பயணித்து பதவிகள் இல்லாமல் இருக்கிறார். அவருக்கு உரிய பதவியை பிரதமர் நரேந்திர மோடி அளிக்க வேண்டும் என்றே வேலூர் தொகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
வேலூர் எம்.பி. தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 2014, 2019-ஆம் ஆண்டு தேர்தல்களில் இரு முறை போட்டியிட்டு சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்ற புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் 2024-ஆம் ஆண்டு தேர்தலிலும் ஹாட்ரிக் தோல்வியைத் தழுவினார். சுமார் 2.15 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியுற்றதை யாரும் நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால், உண்மையில் சொந்த கூட்டணி கட்சியினரே அவருக்கு சூனியம் வைத்துவிட்டனர். அதிமுக வேட்பாளர் பசுபதி டெபாசிட் இழந்தது எதிர்பார்த்ததுதான் என்றாலும், ஏ.சி.எஸ். வாக்கு வித்தியாசம் அரசியல் வட்டாரத்தையே அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.
கடந்த இரு முறை வெற்றி பெற்றிருந்தால் மத்திய அமைச்சர், இந்த முறையும் வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக மத்திய அமைச்சர் என்ற நிலையில், அவர் மீண்டும் மீண்டும் சோதனைக்குள்ளாவது பெரிய அதிர்ச்சியாக உள்ளது என்கின்றனர் நடுநிலையாளர்கள்.
தோல்வியை கண்டு துவளாதவர் என்றாலும், திமுகவினரே அதிருப்தியில் இருந்த சிட்டிங் எம்.பி. கதிர்ஆனந்திடம் இந்த அளவுக்கு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி என்றால் எப்படி இருக்கும்.
இவர் தோல்விக்கு என்னதான் என்று விசாரித்தோம்.கட்சிப் பாகுபாடு பார்க்காமல் வாரி இறைக்கும் வள்ளல் மீண்டும் களம் காண்கிறார் என்றால் சந்தோஷம் இருக்காமல் என்ன செய்யும். பாஜக கூட்டணிக் கட்சியினர் சந்தோஷமும் அடைந்தனர். நூற்றுக்கணக்கான லட்சாதிபதிகளும், பல கோட்டீஸ்வரர்களும் உருவாகிவிட்டனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கோடிக்கணக்கணக்கில் பணம் இறைத்த அவரிடம் பணத்தை வாரி சுருட்டினர் கட்சியினர்.
அதிலும், பாஜகவினரும், பாமகவினரும் புதிய நீதிக் கட்சியினரும் அடித்த கொள்ளைக்கு அளவே இல்லை. அதோடு நிற்காமல் தேர்தல் முடிந்த பின்னரும், ஒருவருக்கொருவர் சோஷியல் மீடியாவில் சகட்டு மேனிக்கு சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கின்றனர். வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகர் மீது பண மோசடி புகார்கள், பேர்ணாம்பட்டில் கமலாபுரம் ஆர்.வி.மூர்த்திக்கு அடி உதை, பேர்ணாம்பட்டு ஒன்றிய பாஜக கூண்டோடு கலைப்பு, ஆம்பூரில் புதிய நீதிக் கட்சிக்கும்- பாஜகவுக்கும் பணப் பங்கீட்டில் அடி தடி என்றெல்லாம் நாள்தோறும் ஏ.சி.சண்முகத்தின் பெயர் தேர்தலுக்கு பின்னரும் வாக்கு எண்ணிக்கை முந்தைய நாள் வரை அடிபட்டுகொண்டே இருந்தது.
இதைவிட முத்தாய்ப்பாய், கே.வி.குப்பம் ஒன்றிய பாஜக மகளிரணி தலைவி எஸ்.சுதா பிரியா ஒருபடி மேலே போய், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கே புகார்கடிதம் அனுப்பி விசாரணை நடத்த கடிதம் அனுப்பியுள்ளதும் நடந்தேறியது.
தேர்தலுக்கு முன்பாக, ஏ.சி.எஸ். செய்த சேவைகள் சொல்லி மாளாது. 360 மருத்துவ முகாம்கள், 7 வேலைவாய்ப்பு முகாம்கள், கிரிக்கெட், கபடி, கோலப் போட்டி, மராத்தான் போட்டி, 50 ஆயிரம் வேட்டி சேலைகள் என்று 5 லட்சம் பேருக்கு நேரடியாக உதவி செய்துவிட்டார். இதனால்தான் பிரதமர் நரேந்திர மோடியே வேலூருக்கு பிரசாரம் செய்ய வந்தார்.
ஆனால், பாஜக மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி ஏராளமான பணத்தை ஏ.சி.எஸிடம் வாங்கிய பிறகே, பாஜகவினரை ஏ.சி.எஸ்.ஸிடம் சேர விட்டாார். வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகர், பொதுச்செயலாளர் ஜெகன் அடித்த கொள்ளைக்கு அளவே கிடையாது.
தேர்தலின்போது, பாமகவின் என்.டி.சண்முகம், கே.எல்,இளவழகன், ஜி.கே.ரவி என மூம்மூர்த்திகளும், அமமுகவின் என்.ஜி.பார்த்திபனும் கிளைக்கழக நிர்வாகிகளுக்கே பட்டை நாமம் போட்டார். வாங்கியது பல ஆயிரம் என்றால் கொடுத்தது சில நூறுகள்தான் கிளை நிர்வாகிகளுக்கு.
தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு பூத் கமிட்டி செலவுக்கும் வாக்காளர்களுக்கும் கொடுத்த பணத்திலும் ஆளாளுக்கு கை வைக்க தொடங்கினர். இதில் ஏற்பட்ட பிரச்னைகள் இப்போது அடிதடி ரேஞ்சுக்கு செல்கிறது.
ஆம்பூரில் பாஜகவினரும் புதிய நீதிக் கட்சியினரும் ஆளாளுக்கு அடித்துகொண்டனர்.பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் பணம் சுருட்டல் விவகாரம் முற்றி, சோஷியல் மீடியாவில் நாறி கட்சி அமைப்பே கலைக்கப்பட்டுவிட்டது.புதிய நீதிக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் கமலாபுரம் ஆர்.வி.மூர்த்தியை நடுரோட்டில் ஓட, ஓட விரட்டினர் பாஜகவினரும் பாமகவினர்.கே.வி.குப்பம் ஒன்றிய பாஜக தலைவி எஸ்.சுதாபிரியா புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கே அனுப்பிய மனுவில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர் பாரத் மகி என்பவர் சுதா பிரியாவை திருடி என்றும் தொண்டரணி செயலாளர் பட்டு பாபு சுதா பிரியாவுக்கு மிரட்டலும் விடுத்துள்ளார் என்று கூறியிருந்தார்.
வேலூர் மாவட்ட புதிய நீதிக் கட்சி செயலாளர் பிரம்மாஸ் செந்தில் அடியாள்களோடுதான் பிரசாரத்துக்கு சென்றார்.குடியாத்தம் நகர செயலாளர் பிச்சனூர் ரமேஷை மிரட்டி, அடித்து உதைத்து, ஆபிஸில் செல்போனை பிடித்து அழ வைத்து சிறைபடுத்திய கொடுமைகள்தான் நடந்தன. இதனால்தான் ரமேஷ் சார்ந்த நெசவாளர்கள் சமூகத்தினர் கொதிப்படைந்து, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஓட்டு போடவே வரவில்லை என்கிறார்கள்.
புதிய நீதிக் கட்சியினர் உருவாக்கிய அம்பேத்கர் பேரவை நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுத்தவர் பிரம்மாஸ் செந்தில். இவரது எடுபிடிகளின் அட்டகாசத்தால் புதிய நீதிக் கட்சியின் இளஞ்செழியன், இராமஇளங்கோவன், பேர்ணாம்பட்டு லோகு போன்றோர் கண்களில் கண்ணீர் விட்டே அழுதுள்ளனர். பிரம்மாஸ் செந்தில் குரூப்பின் ஆபாச பேச்சை கேட்டு கோபம் அடைந்த ஐ.டி. விங் பிரவீன் என்பவர் கட்சி ஆபிஸில் நான்கு சேர்களை, டேபிள்களை உடைத்து ரகளை செய்தார்.
மொத்தத்தில் பல கோடிகளை செலழித்து. சமூக சேவைகளால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த ஏ.சி.எஸ். வெற்றி பெறாமல் போனதற்கு பாஜக, பாமக, புதிய நீதிக் கட்சியினரின் ஒரு கோஷ்டியினர்தான் காரணம்.சாதனை படைக்கும் செயல்களை ஏ.சி.எஸ். செய்தார். அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய கூட்டணி கட்சியினரான பாமக, பாஜக, புதிய நீதிக் கட்சியினர் பணம் வாரி சுருட்டல், ஆபாச பேச்சு, செல்போனில் மிரட்டல், ரவுடித்தனம்.. என்று அவருக்கு கெட்ட பெயர் சம்பாதித்து கொடுத்து விட்டனர். அதிமுகவில் வேட்பாளர் டெபாசிட் இழந்ததற்கு தார்மீக பொறுப்பேற்று வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்ஆர்கே.அப்பு, புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், ஆம்பூர், வாணியம்பாடி பகுதி கே.சி.வீரமணி ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று ரத்தத்தின் ரத்தங்கள் திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை யை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.