சினிமா
கோவிட் தொற்று: பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை கவலைக்கிடம்.
கோவிட் தொற்று உறுதியானதையடுத்து மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கோவிட் -19 தொற்று உறுதியானதையடுத்து மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்தியாவின் பாடகர் ஐகான் லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவருக்கு முன்னர் வழங்கப்பட்ட வென்டிலேட்டர் சிகிச்சையே தற்போது மீண்டும் அளிக்கப்பட்டுவருகிறது.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவரும் மூத்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு 92 வயதாகிறது. ஜனவரி 11ஆம் தேதி, அவரது வீட்டில் ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.இதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது. லதா மங்கேஷ்கரின் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டபோதும், தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) இருந்துவந்தார்.
இந்திய சினிமாவின் முக்கியப் பாடகர்களில் ஒருவராகப் போற்றப்படும் லதா மங்கேஷ்கர், 2001ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதான ‘பாரத ரத்னா’ விருதைப் பெற்றார்.’நைட்டிங்கேல் ஆஃப் இந்தியா’ என அழைக்கப்படும் மங்கேஷ்கர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தித் திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பல்வேறு இந்திய, வெளிநாட்டு மொழிகளிலும் அவர் பாடல் பாடியுள்ளார்.