சூப்பர் ஸ்டாரைச் சந்தித்த உலக நாயகன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம், ’விக்ரம்’. இதில், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி உள்பட பலர் நடித்துள்ளனர். சூர்யா, கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பான் இந்தியா முறையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம், ஜூன் 3-ம் தேதி வெளியாகிறது. படத்துக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது.
இந்தப் படத்தின் புரொமோஷன் வேலைகளில் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கியுள்ளார். இப்போது அவர் மலேசியா சென்றுள்ளார். அங்கு படத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தை, கமல்ஹாசனும் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்தப் புகைப்படங்களை இயக்குநர் லோகேஷ், இப்போது தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.