தலைப்பு செய்திகள்
தமிழகத்திலேயே முதன்முறையாக பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்திலேயே முதல்முறையாக பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கியில், இளம் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்க, ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற புதிய திட்டம் துவங்கபட்டுள்ளதாக அதன் தலைமை அலுவலக பொதுமேலாளர் தெரிவித்துள்ளார்.
பாரத ஸ்டேட் வங்கியின் பெரம்பலூர் கிளையின் புதுப்பிக்கப்பட்ட அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியா, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மணி ஆகியோர் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை தலைமை அலவலக பொதுமேலாளர் நிரஜ்குமார் பாண்டா, துணைபொதுமேலாளர் பிரசன்னகுமார், மண்டல மேலாளர் ஹேமா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து பெரம்பலூர் கிளையின் சார்பில் ரூ.2.50 லட்சம் செலவில் மாவட்ட காவல்துறைக்கு சிசிடிவி கேமாரா அமைப்பதற்கான நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு இளம் தலைமுறையினர்களுக்கு சிறு, குறு கடன்களும், கல்விக்கடன்களும் வழங்கப்பட்டது.
பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக இளம் தொழில் முனைவோர்கள் ஊக்குவித்தல், அரசின் கடன் உதவி திட்டங்கள் மற்றும் குழு சார்ந்த கடன் திட்டங்கள் மட்டுமின்றி சிறு, குறு கடன் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை பொது மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாகவும், இளம் தொழில் முனைவோர்களை உருவாக்கி, வேலை வாய்ப்பினை உருவாக்கிடவும் தமிழகத்திலேயே முதன்முறையாக பெரம்பலூர் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ‘நான் உங்களுக்கு உதவலாமா’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டு, அவர், இது போன்ற நோக்கங்களுடன் வங்கிகிளைகளுக்கு வருபவர்களுக்கு உதவி செய்வதோடு, அவர்கள் வளர்ச்சியடைய தேவையான சேவைகளை செய்வார்.
தொடர்ந்து இந்த திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளுக்கும் விரிவுபடுத்தி செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அந்த வங்கியின் சென்னையில் உள்ளூர் தலைமை அலுவலக (Local Head office – Chennai) பொது மேலாளர் நிரஜ்குமார் பாண்டா மற்றும் மண்டல மேலாளர் ஹேமா ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள், பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.