தலைப்பு செய்திகள்
உத்தராகண்ட்: தோல்வியடைந்த புஷ்கர் மீண்டும் முதல்வராவது எப்படி?

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக வென்று ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டாலும், உத்தர பிரதேசத்தைத் தவிர பிற மாநிலங்களில் முதல்வர் யார் என்பதில் குழப்பம் நீடித்துவந்தது.
இந்நிலையில், கோவா முதல்வராக பிரமோத் சாவந்த்தும், மணிப்பூர் முதல்வராக என்.பீரேன் சிங்கும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உத்தராகண்ட் மாநிலத் தேர்தலிலும் முந்தைய முதல்வரான புஷ்கர் சிங் தாமியே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடிமா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்த அவர் எப்படி மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று கேள்விகள் எழுந்தன.
நம்பிக்கைக்குரியவர்
தேர்தலில் தோல்வியடைந்தாலும் அவர் மீது கட்சித் தலைமைக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையே அவரது தேர்வு காட்டுகிறது என்கிறார்கள். இதுதொடர்பாக நடந்த பாஜக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் அவரது பெயரைப் பரிந்துரைத்தவர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். 2021 மார்ச் முதல் ஜூலை வரை மூன்று பேர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டனர். கடைசியாக புஷ்கர் சிங் தாமி முதல்வராக நீடித்தார். எனினும், முதல்வர் வேட்பாளர் என யாரையும் பாஜக முன்னிறுத்தவில்லை. மோடி அரசின் திட்டங்களைச் சொல்லியே இந்தத் தேர்தலில் பாஜக வென்றது.
முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர்கள் தோல்வியடைந்த பின்னரும், முதல்வராகப் பதவியேற்றுக்கொள்வது புதிதல்ல. முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொள்பவர் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் இடைத்தேர்தலில் நின்று முதல்வராகப் பதவியைத் தொடர முடியும்.
2021 மேற்கு வங்கத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மம்தா பானர்ஜி, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்று முதல்வர் பதவியில் தொடர்கிறார்.
அதேபோல, 6 மாதங்களுக்குள் புஷ்கர் சிங் தாமி ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு வென்று பதவியைத் தொடர முடியும். டீடீஹாட் தொகுதியிலிருந்து அவர் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. அந்தத் தொகுதியில் பாஜக சார்பில் வென்ற பிஷன் சிங் சுஃபால், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com http://aramseithigal.in http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.
