தலைப்பு செய்திகள்
பாஜகவை நேசிக்கின்றனர் முஸ்லிம்கள்: சொல்கிறார் உபி அமைச்சர் தானீஷ் அன்சாரி.

“பிரதமர் நரேந்திரமோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தை உத்தர பிரதேசத்தின் முஸ்லிம்கள் நேசிக்கத் துவங்கி உள்ளனர்” என இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த அமைச்சர் தானீஷ் ஆஸாத் அன்சாரி தெரிவித்துள்ளார்.
உபியில் சுமார் 28 சதவீதம் உள்ள சன்னி பிரிவு முஸ்லிம்கள், பாஜகவை விரும்பாதவர்கள் எனக் கருதப்படுகிறது. இதன் காரணமாக, பாஜகவும் முஸ்லிம்களை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்காமல், தவிர்ப்பது உண்டு. இதற்கு தனது இந்துத்துவா கொள்கையினால், 2014 முதல் பாஜக அரசியல் செய்வதும் காரணமாகக் கருதப்படுகிறது. உபியின் அமைச்சரவையில் முஸ்லிம்களை கண்டிப்பாக சேர்க்க வேண்டியதாக உள்ளது. இங்கு இரண்டு பிரிவுகளாக ஷியா மற்றும் சன்னியின் வஃக்பு வாரியத் சொத்துகள், மதரஸாக்கள் அதிகம் உள்ளன. இவற்றை நிர்வாகிக்க, முகலாயர் ஆட்சி முதல் முஸ்லிம்களிடமே ஒப்படைக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுபான்மைத்துறை அமைச்சராக மோசின் ராசா நியமிக்கப்பட்டிருந்தார். இந்தமுறை அவருக்குப் பதிலாக பாஜகவின் மற்றொரு முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த தானீஷ் ஆஸாத் அன்சாரி அமைச்சராகி உள்ளார்.
