BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்.

 


மோடியும் அம்பேத்கரும்’ என பெயரிடப்பட்ட புத்தகம் கடந்த 14 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்திற்கு முன்னுரை எழுதி உள்ள பிரபல இசை அமைப்பாளர் இளையராஜா, அம்பேத்கரின் சிந்தனைகளை அடிப்படையாக கொண்டு, மோடி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டிருந்தார்.

இளையராஜாவின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அம்பேத்கருடன் பிரதமர் நரேந்திர மோடியை ஒப்பிடுவது தவறானது என்று, சமூக வலைதளங்களில் இளையராஜாவுக்கு எதிராக கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம், இளையராஜாவின் கருத்து சரியானது எனவும் ஒருசிலர் ஆதரவாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி குறித்து தெரிவித்த கருத்தை திரும்பப் பெற மாட்டேன் என்று இசை அமைப்பாளர் இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவருக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் மற்றும் தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர், இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், இசை அமைப்பாளர் இளையராஜா, நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநிலங்களவைக்கு 12 நியமன உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பது வழக்கம். பொருளாதாரம், இலக்கியம், ஊடகம், கலை, அறிவியல், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்கள் இவ்வாறு நியமிக்கப்படுகின்றனர்.

பாஜகவை சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. பாஜகவுடன் உரசல் போக்கை கடைபிடித்து வருவதால், அவர் மீண்டும் எம்.பி. ஆக நியமிக்கப்பட போவதில்லை என்பது உறுதியாகி உள்ளது. இதை அடுத்து, சுப்பிரமணியன் சுவாமிக்கு பதிலாக இளையராஜாவுக்கு நியமன எம்.பி பதவி வழங்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள https://aramseithigal.com  http://aramseithigal.in  http://aramnews.in “அறம் செய்திகள்”-ளுடன் தொடர்ந்திருங்கள்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )