தலைப்பு செய்திகள்
தாய் மொழியில் கல்வி கற்பது மன ரீதியிலும், கல்வி ரீதியிலும் முன்னேற்றம் அளிக்கும்!: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
டெல்லி: தாய் மொழியில் கல்வி கற்பது மன ரீதியிலும், கல்வி ரீதியிலும் முன்னேற்றம் அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சர்வதேச தாய்மொழி தினம் இன்று கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் தங்கள் தாய்மொழியின் சிறப்புகளை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில், 2022 – 2023ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் கல்வித்துறைக்கென கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவம் குறித்து பிரதமர் மோடி, காணொலி மூலம் கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஒன்றிய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள், தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த பெரிதும் உதவும் என்று தெரிவித்தார்.
தேசிய டிஜிட்டல் பல்கலைக்கழகம் அமைக்கும் முடிவால் கல்வியில் இடப்பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்றும் கூறினார். தாய்மொழியில் கல்வி கற்பது குழந்தைகளின் மனவளர்ச்சியுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, தாய் மொழியில் கல்வி கற்பது மனரீதியிலும், கல்வி ரீதியிலும் முன்னேற்றம் அளிக்கும் எனவும் தெரிவித்தார். பல மாநிலங்களில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி, அந்தந்த மாநில மொழிகளில் தொடங்கப்பட்டுள்ளதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகில் 6 ஆயிரம் மொழிகள் உள்ளன. இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுபவை. 3 ஆயிரம் மொழிகள் பத்தாயிரம் பேருக்கும் குறைவானோர் பேசுபவை.
ஆனால் தமிழ் மொழியை 7 கோடி பேர் பேசுகின்றனர். உலகில் 94 நாடுகளில் தமிழ்பேசுபவர்கள் உள்ளனர். இந்தியா பல மொழிகள் பேசும் நாடு. இதில் 74 சதவீத மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவீத மக்கள் தமிழை உள்ளடக்கிய திராவிட மொழியையும் பேசுகின்றனர். இருப்பினும் இந்திய அரசால் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மாதம் ஒரு தாய்மொழி அழிவதாகவும், அதனை தடுக்க இந்த தினம் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.