தலைப்பு செய்திகள்
அதிமுகவினருக்கு அடுத்த ஷாக். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கில் கைது.
தி.மு.க நிர்வாகியை அரைநிர்வாணமாக அழைத்துச் சென்ற விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இரண்டாவது வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை ராயபுரம் 49வது வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக திமுக நிர்வாகி நரேஷ் என்பவரை அதிமுகவினர் மடக்கி பிடித்தனர். ஜெயக்குமார் முன்னிலையிலேயே அவரை சிலர் தாக்க தொடங்கினர். அப்போது, பிடிபட்ட நபரை அடிக்க வேண்டாம் என்றும் அவரது கையை கட்டும்படியும் கூறி ஜெயக்குமார் தடுத்தார். பின்னர், அந்த நபரிடம் சட்டையை கழட்டும்படி கடுமையாக ஜெயக்குமார் கூறினார்.
திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணத்துடன் கைகளை கட்டி அடித்து இழுத்துச் சென்ற இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் விடுத்தல், ஆபாசமாக பேசுதல், ஆயுதங்களைப் பயன்படுத்துதல், உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டையார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
இதனிடையே தேர்தலன்று ராயபுரம் கல்மண்டபம் அருகே முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் தேர்தல் நடத்தை விதிமீறல், தொற்று நோய் பரவல் சட்டம், தெரிந்தே பிறருக்கு தொற்று நோய் பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 110 நபர்கள் மீது ராயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ராயபுரம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
மேலும், ஜெயகுமார் ஜாமின் வழக்கு ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காலை 10:30 மணிக்கு விசாரணை வருவது குறிப்பிடத்தக்கது.