BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது’’.

‛நடிகர் அஜித் அரசியலுக்கு வருகிறார்….’ 90களில் இருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் பரபரப்பான வதந்தி இது. அஜித்தின் செயலுக்கும், அவர் அரசியலுக்கும் வருவதற்கான அறிகுறியே இருப்பதாக தெரியவில்லை. ஆனால், அவரை அவரை அடுத்த எம்ஜிஆர் என்கிற அளவிற்கு பல அரசியல் தலைவர்கள் புகழ்ந்திருக்கிறார்கள்.

3 ஆண்டுகளுக்குப் பின், பல்வேறு போராட்டங்களுக்குப் பின், அஜித் நடித்த வலிமை, நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், வலிமை படம் மூலம் அஜித் அரசியலுக்கு வரப்போகிறார் என கருத்து பதிவிட்டுள்ளார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன். வலிமை படத்தில் ‛அம்மா’ பாடல் இடம் பெற்றிருப்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள அவர், ஜெயலலிதா பிறந்தநாளான நாளை(பிப்ரவரி 24) அன்று வலிமை வெளியிட முடிவு செய்துள்ளதை குறிப்பிட்டு, இந்த பதிவை போட்டுள்ளார்.


இதோ ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனின் பேஸ்புக் பதிவு. ‛‛காலை நண்பர்களோடு நடைபயணம் மேற்கொண்டேன். அப்போது என்னுடைய நண்பர்களில் ஒருவர் திரையரங்கில் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டார். உடனே நான் எதுவும் டிக்கெட் முன்பதிவு செய்து தர வேண்டுமா? என்று கேட்டேன். ஆமாம் அண்ணா, நாளை அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் வெளிவருகிறதல்லவா! என்று உற்சாகத்துடன் சொன்னார்.
வலிமை திரைப்படம் புரட்சித்தலைவியின் பிறந்தநாளான 24ஆம் தேதி வெளியிடப்படுவது குறித்து இரண்டொரு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன். வலிமை திரைப்படத்தின் தாய் பாசம் பற்றிய பாடல் அம்மா அவர்களின் நினைவு தினத்தில் வெளியிடப்பட்டது. திரைப்படம் அம்மா பிறந்த நாளில் வெளிவர இருக்கின்றது. இது குறித்து, நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த நண்பர் கேட்டார். புரட்சித்தலைவியின் மீது அதீத அன்பும், மரியாதையும் கொண்ட அஜித் அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு தன்னை ஆயத்தம் செய்து கொள்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. அம்மாவின் தொண்டர்களை அரவணைக்க விரும்புகிறாரா? அம்மாவின் கம்பீரம் படத்தின் பெயரில் இருக்கிறது. படத்தில் வரும் காட்சிகளையும், வசனங்களையும் பார்த்துதான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்தேன். மாயக் கண்ணன் பிறந்த அஷ்டமியான நாளை படம் வெளிவருவது ஆச்சரியம் தானே! அஜித் அவர்கள் அரசியலில் அடியெடுத்து வைக்கப் போகிறாரா? இல்லை நடிகை ஶ்ரீதேவியின் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வெளியிடப்படுகிறதா? என்பதற்கு வந்த பிறகே விடை கிடைக்கும்.

காரணங்கள் எதுவாக இருந்தாலும் எங்களின் திருநாளான தாயின் பிறந்தநாளில் வெளிவரும் சகோதரர் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் மகத்தான வெற்றி பெற என் இதயமார்ந்த
வாழ்த்துக்கள்!’’
என்று அந்த பதிவில் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அதிமுகவில் அஜித் இணைவார் என்கிற வதந்தி, பல ஆண்டுகளாக நிலவி வரும் நிலையில், வலிமை மூலம் தன் வலிமையை நிரூபிக்க அஜித் தயாராகிவிட்டார் என ஜெயலலிதா உதவியாளர் கூறியிருப்பது, கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விசயமாகவே தெரிகிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )