தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் ஜல்லிக்கட்டு
களத்தில் நின்று விளையாடிய காளைகள்- திமிலை பிடித்து அடக்கிய வீரர்கள்.
தஞ்சையை மாவட்டம் நாஞ்சிக்கோட்டையில் உள்ள வீர முனி ஆண்டவர் சிவராத்திரி விழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. துணை ஆட்சியர் சுகபத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக வீரர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். கீழே விழுந்தால் காயம் ஏற்படாமல் இருக்க வாடிவாசலில் இருந்து 100 மீட்டர் தூரம் வரை ஒரு அடி உயரத்திற்கு தென்னை நார்கள் பரப்பப்பட்டிருந்தன. முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. நாஞ்சிக்கோட்டையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி கண்காணிக்க சல்லிக்கட்டு கண்காணிப்பாளர் கலந்து கொண்டார்.
ஜல்லிக்கட்டில் 650 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். முதலில் கோவில் காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. அதன் பின்னர் வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் பாய்ந்து சென்று அடக்க முயன்றனர். ஒரு சில காளைகளின் திமில்கள் வீரர்கள் பிடியில் சிக்கியது. ஆனால் பல காளைகள் திமிறி எழுந்து யாருடைய கைகளிலும் அகப்படாமல் சீறிப் பாய்ந்து சென்றன. ஆக்ரோஷமாக ஓடி வந்த காளைகளை வீரர்கள் திமிலை பிடித்து அடக்கிய காட்சிகள் சிலிர்ப்பூட்ட வைத்தது.
ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெள்ளி காசு, நாற்காலி, சைக்கிள், கட்டில், கடிகாரம், குக்கர், குழலை பிரிட்ஜ், டிவி உள்ளிட்ட ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. இதே போல் அடக்கமுடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது.
போட்டியை காண தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். பலர் போட்டி நடைபெறும் இடத்தின் அருகே இருந்த உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நின்றும், களத்தில் அமைக்கப்பட்ட இரும்பு தடுப்புகள் வெளிப்புறமாக நின்றபடியும் போட்டியை கண்டு களித்தனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையும் சீறிப் பாய்ந்து வெளியே வரும் போதும் , வீரர்கள் காளைகளை அடக்கிய போதும் ஆரவாரத்துடன் கோஷங்கள் எழுப்பி உற்சாகப்படுத்தினர்.