தலைப்பு செய்திகள்
தஞ்சை பெரியகோவிலில் பிரகன் நாட்டியாஞ்சலி விழா.
ஆயிரம் ஆண்டு கால தமிழ் மக்களின் கலை, பண்பாடு, சமயம், நாகரிகம் ஆகியவற்றின் உறைவிடமாகவும், ஆடல் வழியில் இறைவனை போற்றும் நெறியில் மிக முக்கிய அங்கமாக விளங்கி வந்துள்ள தலமாகவும், யுனெஸ்கோ நிறுவனம் உலக மரபு சின்னமாக அறிவித்து போற்றி பாதுகாத்து வரும் தஞ்சை பெரியகோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு தொடர்ந்து 19வது ஆண்டாக பிரகன் நாட்டியாஞ்சலி – நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மாமன்னன் இராஜராஜனால் எழுப்பிவிக்கப்பட்ட இத்திருக்கோயில் 1012 ஆண்டுகளை கடந்து நமது கலையை போற்றி பாதுகாத்து வருகிறது.
இவ்விழாவினை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் தஞ்சை பெருவுடையார் ஆலயத்தில் இவ்வாண்டு மார்ச் மாதம் 1ம் தேதி மகா சிவராத்திரி நாளன்று பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி மாலை 6.00மணி முதல் 2ம் தேதி அதிகாலை 6.00மணி வரை இரவு முழுவதும் நடைபெற உள்ளது.
இவ்வாண்டு பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த உள்ளனர். பிரகன் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் உதவியுடன் நாட்டின் புகழ்பெற்ற நடன கலைஞர்களான சென்னை திருமதி. மீனாட்சி சித்தரஞ்சன், திருமதி.சித்ரா முரளிதரன், முனைவர். விஜயம் கார்த்திக், கோவை திருமதி. ஜெயந்தி ராமசந்திரன், பெங்களூரு திரு. அணில் ஐயர், முனைவர் சுபர்ண வெங்கடேஷ், செல்வி. அஞ்சனா குப்தா, ஹைதராபாத் திரு. சுரேந்திரநாத், மும்பை திரு. ஹரி கல்யாணசுந்தரம், திருமதி. ரேவதி ஸ்ரீனிவாசராகவன், தஞ்சாவூர் திரு. சந்திரசேகரன் கிட்டப்பாபிள்ளை உள்ளிட்ட பல நடன கலைஞர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
பிரகன் நாட்டியாஞ்சலி 2022 விழா ஏற்பாடுகளை பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன், தென்னகப் பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் சிறப்பாக செய்து வருகின்றனர்.
இவ்விழாவில் திரளான பக்தர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு நாட்டியாஞ்சலி நிகழ்வினை கண்டுகளித்து சிறப்பிக்க வேண்டுமாறு பிரகன் நாட்டியாஞ்சலி பவுண்டேசன் தலைவர் டாக்டர். வி. வரதராஜன் மற்றும் செயலாளர் பொறியாளர் ச. முத்துக்குமார் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.